Published : 10 Jul 2024 05:55 AM
Last Updated : 10 Jul 2024 05:55 AM

சுற்றுலா, அறநிலைய துறையுடன் இணைந்து ‘தி இந்து’ குழுமம் தயாரித்த 2 நூல்களை முதல்வர் வெளியிட்டார்

தமிழ்நாடு சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலையத் துறையுடன் `தி இந்து’ குழுமம் இணைந்து தயாரித்துள்ள 2 நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நேற்று வெளியிட்டார். நிகழ்ச்சியில், சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, துறை செயலர் பி.சந்திரமோகன், சுற்றுலா ஆணையர் சி.சமயமூர்த்தி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் மற்றும் வெளியீட்டாளர் நிர்மலா லஷ்மண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை: தமிழக சுற்றுலாத் துறை, அறநிலைய துறை ஆகியவற்றுடன் இணைந்து ‘தி இந்து’ குழுமம் தயாரித்துள்ள 2 நூல்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக சுற்றுலாத் துறையும், ‘தி இந்து’ குழுமமும் இணைந்து ‘Forts of Tamil Nadu: A Walk-Through’ என்ற சுற்றுலா தகவல் களஞ்சிய நூலை தயாரித்துள்ளன.

அதேபோல, இந்து சமய அறநிலையத் துறையும், ‘தி இந்து’ குழுமமும் இணைந்து, நாட்டார் தெய்வங்களின் வரலாறு, வழிபாடு,பண்பாட்டு முறைகள் ஆகியவற்றை விளக்கும் வகையில் வண்ணப் புகைப்படங்களுடன் கூடிய ‘Folk Deities of Tamil Nadu’ என்ற நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், இந்த 2 நூல்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

நூல் அறிமுகம்: ‘Forts of Tamil Nadu: A Walk-Through’ எனும் நூலில், சுற்றுலாத் துறையினர், சிறப்பு எழுத்தாளர்கள், இந்து குழுமத்தின் எழுத்தாளர்கள் ஆகியோர் தமிழகத்தில் உள்ள 17 புகழ்பெற்ற கோட்டைகளின் கட்டிடக் கலை, அதன் பாதுகாப்பு அம்சங்கள், கோட்டைகளை கட்டி எழுப்பியவர்கள் விவரம், இவற்றை கைப்பற்ற நடந்த போர்கள், படை வலிமை, அக்கால அரசியல் நிகழ்வுகள், சர்வதேச வர்த்தகம் உள்ளிட்ட வரலாற்று சிறப்புகளை ஆராய்ச்சி கட்டுரைகள் மூலம் ஆவணப்படுத்தி உள்ளனர். இந்த நூல் மொத்தம் 228 பக்கங்கள் கொண்டது.

‘Folk Deities of Tamil Nadu’ எனும் நூல், நாட்டார் தெய்வங்களின் வழிபாட்டு முறைகளிலும், அவற்றின் தன்மைகளிலும் விரைவான மாற்றங்கள் ஏற்பட்டு வரும் சூழலில்,பாரம்பரியமிக்க இந்த தெய்வங்களையும், அவற்றின் வரலாற்றையும் மீட்டெடுக்க உதவும் காலப் பெட்டகமாக அமைந்துள்ளது. அறநிலையத் துறை மற்றும் ‘தி இந்து’ குழுமத்தால் இந்த நூலை தமிழில் மொழியாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

நூல் வெளியீட்டு நிகழ்வில் சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலர்சிவ்தாஸ் மீனா, சுற்றுலா, அறநிலைய துறை செயலர் பி.சந்திரமோகன், சுற்றுலா ஆணையர் சி.சமயமூர்த்தி, அறநிலையத் துறை ஆணையர் க.வீ.முரளீதரன், ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் மற்றும் வெளியீட்டாளர் நிர்மலா லஷ்மண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x