Published : 10 Jul 2024 05:20 AM
Last Updated : 10 Jul 2024 05:20 AM
விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இத்தேர்தலில் வாக்களிக்க 2.37 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். பாதுகாப்பு பணியில் 216 மத்திய பாதுகாப்பு படையினர், 2,800 போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரைவேட்புமனு தாக்கல் நடந்தது. 24-ம்தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடந்து, 26-ம் தேதி இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதிமுக போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ள நிலையில், திமுக சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சைவேட்பாளர்கள் என 29 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
கடந்த 15 நாட்களுக்கும் மேலாகஇத்தொகுதியில் நடந்த பிரச்சாரம் கடந்த 8-ம் தேதி மாலை 6 மணியுடன் முடிந்தது.
2.37 லட்சம் வாக்காளர்கள்: இந்நிலையில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி,மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, 276 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் 1,16,962 ஆண்கள், 1,20,040 பெண்கள், 29 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,37,031 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 42 மையங்கள் பதற்றமானதாகவும், 3 மையங்கள் மிக பதற்றமானதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து வாக்குப்பதிவு மையங்களும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகின்றன.
552 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 276 கட்டுப்பாட்டு கருவிகள், வாக்களித்ததை சரிபார்க்கும் 276 விவிபாட் கருவிகள் உள்ளிட்டவை விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து நேற்று காலை போலீஸ் பாதுகாப்புடன், அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
1,355 அலுவலர்கள்: வி.சாலை கிராமத்தில் மாதிரி வாக்குச்சாவடியும், நேமூர் கிராமத்தில் முழுவதும் பெண் ஊழியர்களே செயல்படுத்தும் ‘பிங்க்’வாக்குச்சாவடியும் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 216 மத்திய பாதுகாப்பு படையினர், 2,800 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு பதிவு மையங்களில் 1,355 அலுவலர்கள் பணியில் உள்ளனர்.
தேர்தல் அதிகாரி ஆலோசனை: முன்னதாக, இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “276 வாக்குச்சாவடிகளின் நிகழ்வுகள் முழுவதும்‘வெப் காஸ்டிங்’ செய்யப்படுகிறது. இதன்மூலம் அனைத்து நிகழ்வுகளும் சென்னையில் இருந்து தொடர்ந்து கண்காணிக்கப்படும். 3 கம்பெனி துணை ராணுவ படையினரை தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. இதில் ஒரு கம்பெனியினர், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூலை 13-ம்தேதி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT