Published : 10 Jul 2024 07:53 AM
Last Updated : 10 Jul 2024 07:53 AM

தமிழகம் முழுவதும் போதை பொருள் வழக்குகளில் குறிப்பிட்ட வழக்கறிஞர் ஆஜராகும் மர்மம்: காவலர்களை மாற்ற டிஜிபிக்கு ஐகோர்ட் பரிந்துரை

மதுரை: கேரள மாநிலம், வெல்மான் எடவட்டத்தைச் சேர்ந்தவர் டோனி என்ற ஆண்டோ வர்கீஸ். கஞ்சா கடத்தல் வழக்கில் மதுரை நாகமலை புதுக்கோட்டை போலீஸாரால் கைது செய்யப்பட்ட இவர், 15 மாதங்களாக சிறையில் இருப்பதால், ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். அப்போது, வழக்கறிஞர், மனுதாரர் கையெழுத்து இல்லாமல் இருந்த மனுவைஏற்றதற்கும், வழக்கறிஞர் கையெழுத்திட்ட வக்காலத்தை திரும்ப வழங்கியதற்கும், உயர் நீதிமன்றப் பதிவுத் துறை மீது நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

பின்னர் நடைபெற்ற விசாரணையில், தமிழகம் முழுவதும் போதைப் பொருள் வழக்குகளில் கைது செய்யப்பட்ட நபர்களின் ஒப்புதல் இல்லாமல் நீதிமன்றங்களில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்வதும், 80 சதவீதஜாமீன் மனுக்களை குறிப்பிட்ட ஒரு வழக்கறிஞர் தாக்கல் செய்வதும், இதில் காவல் துறையிலிருந்து நீதிமன்றப் பணிக்கு நியமிக்கப்படும் காவலர் (கோர்ட் ஆர்டலி), வழக்கறிஞர்கள், காவல் ஆய்வாளர்கள் கூட்டுசேர்ந்து செயல்படுவதும் தெரியவந்தது.

நீதிபதி புகழேந்தி முன்னிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மூத்த வழக்கறிஞர் அனந்தநாராயணன் வாதிடும்போது, இந்த செயலுக்கு நீதிமன்றப் பணிக்கு நியமிக்கப்படும் காவலர், வழக்கறிஞர்கள், காவல் ஆய்வாளர்களுக்கும் தொடர்பு உள்ளது.ஒருவர் கைது செய்யப்படும்போது, அந்த நபரின் உறவினர்கள் முதலில்காவல் நிலையத்தை அணுகுவார்கள். அவர்களை நீதிமன்றக் காவலர் தானாக சந்தித்து, தனக்குதெரிந்த வழக்கறிஞரின் முகவரி, செல்போன் எண் அளிக்கிறார். இந்த தகவலை அந்த வழக்கறிஞரிடமும் கூறிவிடுகிறார். பெரும்பாலான வழக்குகளில் நீதிமன்றக் காவலர்தான் கட்டணத்தை நிர்ணயம் செய்கிறார். அந்தக் கட்டணத்தை இருவரும் பங்கிட்டுக் கொள்கின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் அவராகவே வழக்கறிஞரை ஏற்பாடு செய்தால், ஜாமீன் மனுவுக்கு காவல் ஆய்வாளர் பதிலளிக்க மாட்டார். அப்படியே பதில் அளித்தாலும், அதை நீதிமன்றக் காவலர், நீதிமன்றத்தில் ஒப்படைக்கமாட்டார் என்றார்.

இதையடுத்து நீதிபதி, “போதைப் பொருள் வழக்குகளில் குறிப்பிட்ட வழக்கறிஞரே ஆஜராகி வருகிறார். நீதித் துறை நியாயமாக செயல்பட்டால்தான், மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். இதுபோன்ற மோசடி இனியும் நடைபெறாமல் தடுக்கப்பட வேண்டும்.இது தொடர்பாக வழக்கறிஞர்கள், காவல் துறை, தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் மற்றும் டிஜிபி ஆகியோர் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.

நீதிமன்ற மாண்புகள் காக்கப்படவேண்டும். நீதிமன்றக் காவலர்களை அவ்வப்போது மாற்றுவதற்கான வாய்ப்புகளை டிஜிபி கண்டறிய வேண்டும். ஒரு காவலர் பலஆண்டுகளாக நீதிமன்றப் பணியை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். இந்த வழக்கில் மனுதாரர் சிறையிலிருந்த காலத்தை கருத்தில்கொண்டு, ஜாமீன் வழங்கப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x