Published : 10 Jul 2024 05:59 AM
Last Updated : 10 Jul 2024 05:59 AM
சென்னை: விருதுநகர் மாவட்ட பட்டாசு ஆலைகளில் தொடரும் வெடி விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: சிவகாசி அருகே காளையார்குறிச்சி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த செய்தி அறிந்துஅதிர்ச்சியடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் தொடர்ச்சியாக வெடி விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதைத்தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதுகண்டிக்கத்தக்கது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன், தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு தரப் பரிசோதனை மேற்கொண்டு, வெடி விபத்துகளைத் தடுப்பதற்கான புதிய கொள்கையை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பது வேதனை தருகிறது. அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். தொடர்ச்சியாக பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க, தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா: காளையார்குறிச்சியில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பட்டாசு ஆலைவெடி விபத்து தொடர்கதையாகிவிட்டது. இதற்கு நிரந்தரத் தீர்வு காணப்படதில்லை. இறந்தவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு மட்டும் தீர்வாகாது. பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்து நேரிட்டு, ஒரு உயிரிழப்பு கூட இல்லை என்ற நிலையை உருவாக்குவது அவசியம்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: கடந்த 4 மாதங்களில் மட்டும்விருதுநகர் மாவட்ட பட்டாசு ஆலைகளில் நடைபெற்ற வெடி விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். இதனால், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா என்பதே கேள்விக்குறியாகிவிட்டது. தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து நடைபெறுவது, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் செயலற்று இருப்பதையே காட்டுகிறது. இனியும் தாமதிக்காமல், அனுமதி பெறாத பட்டாசு ஆலைகளைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT