Published : 21 May 2018 07:17 PM
Last Updated : 21 May 2018 07:17 PM
தயக்கமின்றி பொது இடங்களுக்கு மாணவிகள் வந்து செல்லும்போது கேலி செய்வோரை எட்டி உதைத்து மூக்கை உடையுங்கள். தன்னம்பிக்கையுள்ள பெண்களாக உருவாகுங்கள் என்று மாணவிகளுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தினார்.
புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, புதுச்சேரி மாநில மகளிர் வள மையம், இளைஞர் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவ மையம் சார்பில் கூட்டுறவுக் கல்வியியல் கல்லூரியில் பெண்கள் தலைமையில் பெண்கள் என்ற தலைப்பில் ஒருங்கிணைந்த பெண்கள் தற்காப்பு பயிற்சிப் பட்டறை இன்று தொடங்கியது.
இப்பயிற்சிப் பட்டறையை கிரண்பேடி தொடங்கி வைத்துப் பேசியதாவது:
''உங்களுக்குப் பிடிக்காத நபர்களை கட்டாயத் திருமணம் செய்ய முயன்றால், இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று கூற வேண்டும். அதை விட்டுவிட்டு பிறகு வாழ்க்கையில் புலம்பக் கூடாது. என்ன பிரச்சினையாக இருந்தாலும், உங்களால் சமாளிக்க முடியவில்லை என்றால் உடனே 1031க்கு புகார் அளியுங்கள்.
திருமணத்துக்கு வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் குற்றம். யாராவது வரதட்சணை கேட்டால் கொடுக்க முடியாது என்று கூறுங்கள். பிறகு அவர்களாவே வரதட்சணையின்றி திருமணம் செய்து கொள்ள இறங்கி வருவார்கள்.
திருமணத்தின்போது உங்களது வங்கிக் கணக்கில் குறிப்பிட்ட தொகையை பெற்றோர் டெபாசிட் செலுத்தினால் அதனைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அதனை யாராவது கேட்டால் எடுத்து கொடுக்கக் கூடாது. எப்போதும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அது உங்களை சுறுசுறுப்பாகவும், உடல் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவும்.
உங்களுக்கு நீங்கள் சரியான தலைமையாக இருக்க வேண்டும். நீங்கள் சரியாகச் செயல்பட்டால் உங்களைப் பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்வார்கள். வாழ்க்கையில் என்ன வேண்டுமா அதனை நோக்கிச் செல்லுங்கள். தன்னம்பிக்கையுடன் இருப்பவர்களால் தவறு செய்யவும் முடியாது. உங்களது பெற்றோரிடம் பெருமையாகக் கூறுங்கள். 'நான் எதுக்கும் பயப்பட மாட்டேன். எந்த பிரச்சினை வந்தாலும் எதிர்கொள்ள முடியும்' என்று. அதேபோல் உங்களால் முடிந்த ஆலோசனைகளை மற்றவர்களிடமும் கூறி வலிமையானவர்களாக மாற்றுங்கள்.
எதைப் பேச வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதனை துணிச்சலுடன் பேசுங்கள். அச்சத்துடன் இருக்காதீர்கள். பெண்களுக்கு புத்தக அறிவு மட்டுமே தன்னம்பிக்கையைத் தராது. என்னால் தலைமையேற்க முடியும் என்று கூறி முன் வரவேண்டும். அப்போதுதான் தன்னம்பிக்கை ஏற்படும். முதலில் பெண்கள் தயக்கமின்றி தனியாகப் பயணம் செய்ய வேண்டும். பெண்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது யாராவது பின் தொடர்ந்தாலோ, கேலி, கிண்டல் செய்தாலோ எட்டி உதையுங்கள். மூக்கை உடையுங்கள். பிறகு அவர்கள் உங்கள் பக்கமே வரவே மாட்டார்கள்.
பெண்கள் என்னை அடிக்கிறார்கள் என்று ஆண்கள் புகார் அளிக்க வேண்டும். அதுபோல் தைரியமாக நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிறகு பெண்கள் தலைமையில் ஆண்கள் என்ற நிலை உருவாக வேண்டும்.''
இவ்வாறு கிரண்பேடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT