Published : 10 Jul 2024 05:15 AM
Last Updated : 10 Jul 2024 05:15 AM

ஆம்ஸ்ட்ராங் படுகொலையை சிபிஐ விசாரிக்க வேண்டும்: குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய இபிஎஸ், அன்புமணி வலியுறுத்தல்

சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்தில் அவரது படத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

சென்னை: படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர். பின்னர், ஆம்ஸ்ட்ராங் படுகொலையை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

சென்னை பெரம்பூரில் கடந்த 5-ம் தேதி பகுஜன் சமாஜ்கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்கு தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி சென்னை அயனாவரத்தில் ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு சென்று அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஆம்ஸ்ட்ராங் படத்துக்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர், பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிசிடிவி காட்சிகளை பார்க்கும்போது ஆம்ஸ்ட்ராங் படுகொலை திட்டமிட்டு நடைபெற்றுள்ளதாக தான் தெரிகிறது. கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை. உண்மை குற்றவாளிகள் சமூகத்தில் எவ்வளவு பெரிய ஆட்களாக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனையை அரசு பெற்றுத்தர வேண்டும்.

அண்மைக் காலமாக தமிழகத்தில் அரசியல் தலைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. பொது மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்ட தலைவர், சேலத்தில் அதிமுக கட்சி பகுதி செயலாளர், தற்போது ஆம்ஸ்ட்ராங் எனபல படுகொலைகள் அரங்கேறியுள்ளன. அந்தவகையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது.

எனவே இவ்வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து மக்களின் சந்தேகங்களை போக்குவது அரசின் கடமையாகும். சிசிடிவிகேமரா பதிவுகளை பார்க்கும்போது, அரசு எடுத்த நடவடிக்கைக்கும், அதில் பார்க்கின்ற காட்சிகளுக்கும் வேறுபாடு உள்ளது. இதனால் உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என்றால் சிபிஐயிடம் வழக்கை ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல்
தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி.

முன்னதாக, பாமக தலைவர் அன்புமணி ஆம்ஸ்ட்ராங் இல்லத்தில் அவரது படத்துக்கு மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஆம்ஸ்ட்ராங் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பு. சமூக நீதிக்கு மிகப்பெரிய பின்னடைவு, அடித்தளத்தில் உள்ள மக்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது அவருடைய கனவு. ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். தமிழக காவல் துறை முழுமையாக விசாரணை செய்வார்களா என்பது சந்தேகமாக உள்ளது.

கூலிப்படை கலாச்சாரத்தை வேரோடு அறுக்கவேண்டும். கொலை செய்தவர்களுக்கு தூக்குத் தண்டனை அளிக்க வேண்டும். தமிழக உளவுத் துறை மொத்தமும் 20 நாட்களாக விக்கிரவாண்டி தொகுதியில் இருந்தது. அதனால்தான் இந்த படுகொலை நடந்திருக்கிறது.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. இந்த கொலைகளுக்கு எல்லாம் காரணம், மது, கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் தான். பொதுமக்கள் பயமின்றி பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x