Published : 09 Jul 2024 11:21 PM
Last Updated : 09 Jul 2024 11:21 PM
சென்னை: “செல்வப்பெருந்தகை குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்தில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கமும் எனக்கில்லை” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையை, குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்று குறிப்பிட்டதற்கு, மகாத்மா காந்தி வழி வந்த தன்னை, நான் அவமானப்படுத்தி விட்டதாக செல்வப்பெருந்தகை மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார்.
மகாத்மா காந்தி வழி வந்த செல்வப்பெருந்தகை கடந்து வந்த பாதை:
* ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு - முக்கிய குற்றவாளி
* 2001 வழக்கு எண் 24(A)/2001. சிபிஐ வழக்கு ஊழல் தடுப்புச் சட்டம் 1988, பிரிவு 13(2) r/w 13(1) (e)
* 2003 வழக்கு எண் 136/2003 இபிகோ 307 – கொலை முயற்சி
* 2003 வழக்கு எண் 138/2003 – தாக்குதல்
* 2003 வழக்கு எண் 277/03 – கொலை மிரட்டல்
* 2003 வழக்கு எண் 451/2003 இபிகோ 324 – பயங்கர ஆயுதங்களால் தாக்குதல், இபிகோ 506 – கொலை மிரட்டல், வெடிபொருள்கள், 1908. இந்த வழக்கில், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2008 வழக்கு எண் 1464/2003 இபிகோ 147 – கலவரம் செய்தல், இபிகோ 148 – பயங்கர ஆயுதங்களால் கலவரம் செய்தல், இபிகோ 506 – கொலைமிரட்டல்
கொலைமுயற்சி வழக்கு, கொலை மிரட்டல் வழக்கு, பயங்கர ஆயுதங்களால் தாக்கிய வழக்கு, பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்திக் கலவரம் செய்த வழக்கு, வெடிபொருள்கள் வழக்கு, கொலை வழக்கு என பல வழக்குகள், சமூகத்தில் மோசமான குற்ற வழக்குகள்தான். குறிப்பாக, கொலை மிரட்டல் வழக்குகள் மட்டுமே மூன்று வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டிருந்தன. இது தவிர, ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு.
குண்டாஸ் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்ததை இல்லை என்கிறாரா? இவரை வேறு எப்படிக் குறிப்பிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்? வாழும் மகாத்மா என்றா? அரசியல் லாபங்களுக்காகவும், தன் மீதுள்ள குற்ற வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், தனது கொள்கைக்கு நேரெதிர் கட்சியில் இணைந்து, காந்தி வழி வந்தேன் என்று நாடகமாடினால் செய்த குற்றங்கள் இல்லை என்று ஆகிவிடுமா?
செல்வப்பெருந்தகை குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்தில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கமும் எனக்கில்லை. செல்வப்பெருந்தகை எங்கு வேண்டுமானாலும் வழக்கு தொடரட்டும். அவரை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று அண்ணாமலை தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சத்தியமூர்த்தி பவனில் செல்வப்பெருந்தகை இன்று அளித்த பேட்டியில், “எனது பெயர் குற்றப்பதிவேடு பட்டியலிலும் ரவுடிகள் பட்டியலிலும் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். உண்மைக்குப் புறம்பாகவும் அவதூறாகவும் பேசினால் என்ன வழக்கு வரும் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு தெரியாதா?. காந்தியைக் கொலை செய்தீர்கள். எங்கள் நடத்தையை குற்றம் சொல்கிறீர்கள். வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவீர்களா!.
என்னை ரவுடி எனக் கூறும் அண்ணாமலை எந்த காவல்நிலையில் என்ன வழக்கு என் மீது உள்ளது என நிரூபிக்க முடியாமா?. என்னை அவதூறாகப் பேசியதற்கு அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். இது கடைசி எச்சரிக்கை. மன்னிப்புக் கேட்காவிட்டால், அவதூறு வழக்கும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு தொடரப்படும்” என்று எச்சரித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT