Published : 09 Jul 2024 05:54 PM
Last Updated : 09 Jul 2024 05:54 PM

பந்தலூர் அருகே சட்டவிரோத காப்பகத்தில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட 13 பேர் மீட்பு

பந்தலூர்: பந்தலூர் அருகே சட்டவிரோத காப்பகத்தில் அடைத்துவைக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட 13 பேரை அதிகாரிகள் மீட்டனர்.

நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட குந்தலாடி பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான முகாம் என்ற பெயரில் அரசு அனுமதி எதுவும் பெறாமல் மையம் ஒன்று இயங்கி வருவதாகவும், அங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்காமல் அடைத்து வைத்திருப்பதாகவும் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் கிடைத்தது.

புகாரின் உண்மைத்தன்மையை அறிந்த மாவட்ட நிர்வாகம், மருத்துவர்கள், வருவாய்த் துறை அதிகாரிகள், காவல் துறையினர் அடங்கிய குழுவினரை சம்பந்தப்பட்ட இடத்துக்கு இன்று அனுப்பியது. மனநல காப்பகம் என்ற பெயரில் இயங்கி வந்த அந்த மையத்தில் குழுவினர், ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மனநலம் பாதித்த 13 பேர் அந்த மையத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அரசிடம் எந்தவித அனுமதியும் பெறாமல் மையம் இயங்கி வந்ததையும், அந்த 13 நபர்களின் விவரங்கள் எதுவும் பராமரிக்கப்படவில்லை என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 13 பேரையும் குழுவினர் மீட்டனர். இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து விசாரணை குழுவினர் கூறியது: ''குந்தலாடி பகுதியில் ‘லவ் ஷேர்’ என்ற பெயரில் மனநலம் குன்றியவர்களுக்கான மையத்தை அகஸ்டின் என்பவர் சட்டவிரோதமாக நடத்தி வந்திருக்கிறார்.

அரசு அனுமதி இல்லாமல் பல ஆண்டுகளாக இந்த மையத்தை வணிக நோக்கில் மட்டுமே நடத்தி வந்திருக்கிறார். எந்தவித ஆவணங்களும் இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டிருந்த மனநலம் குன்றிய 13 பேரை மீட்டுள்ளோம். அவர்கள் அனைவரையும் கோவையில் உள்ள பாதுகாப்பு மையத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மையத்தில் இறந்தவர்களை யாருக்கும் தெரியாமல் அங்கேயே புதைக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்திருக்கிறது. இது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.

அரசு அனுமதி எதுவும் பெறாமல் மனநலம் குன்றியவர்களுக்கான மையம் என்ற பெயரில் மன நலம் பாதித்தவர்களை அடைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x