Published : 09 Jul 2024 05:19 PM
Last Updated : 09 Jul 2024 05:19 PM
விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதியில் நாளை (ஜூலை 10) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவையொட்டி, 3,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ-வான புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. கடந்த மாதம் 14-ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கியது. 24-ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. தாக்கல் செய்யப்பட்ட 64 வேட்பு மனுக்களில் 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தகுதியான மனுக்களில் யாரும் வாபஸ் பெறாததால் 29 வேட்பாளர்களுக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஜூன் 26-ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
இத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி போட்டியிடுவதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இத்தொகுதியில் 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1,16,962 ஆண் வாக்காளர்கள், 1,20,040 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 29 பேர் என மொத்தம் 2,37,031 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.
தேர்தல் பாதுக்காப்புக்காக வடக்கு மண்டல ஐஜி-யான நரேந்திர நாயர் மேற்பார்வையில் டிஐஜி-யான திஷா மிட்டல் தலைமையில் 3 எஸ்பி-க்கள், 900 சிறப்புக்காவல்படை போலீஸார், 220 துணை ராணுவத்தினர் உட்பட 3,000 போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்.கே.நகர் போல்... - கடந்த 10 நாட்களாக 25-க்கும் மேற்பட்ட தமிழக அமைச்சர்கள், அனைத்துக் கட்சி தலைவர்கள் ஒரு சேர குவிந்ததில் விக்கிரவாண்டி ஊரே திக்குமுக்காடிப் போனது. திமுக சார்பில் தொகுதிக்குள் வலம் வந்த 25 அமைச்சர்களுக்கு தலா குறைந்தபட்சம் 6 ஊராட்சிகள் என ஒதுக்கப்பட்டு, அவர்க ளுக்கு கீழே அவர்கள் பகுதி எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் பரபரவென பரப்புரையில் ஈடுபட, கிராமச் சாலைகளில் வெள்ளை இன்னோவா கார்கள் அணிவகுத்து நின்றன.
அதிமுக இந்தத் தேர்தலில் இருந்து ஒதுங்கி கொண்டாலும், பாமக சார்பில் நாள்தோறும் மருத்துவர் ராமதாஸின் அறிக்கையும், அன்புமணி ராமதாஸின் பிரச்சாரமும், வழக்கறிஞர் பாலுவின் தேர்தல்வியூகமும் திமுகவினரை அசால் டாக இருக்கவிடவில்லை. தினமும் பிரச்சாரத்துக்கு பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோர் அழைத்து வரப்பட்டு, கடந்த 10 நாட்களாக ஊரே திருவிழாக் கோலமாக காட்சியளித்தது.
நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்துள்ள சூழலில், “எங்களுக்கு 3 தவணைகளாக பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இன்னும் வரக்கூடும்” என்று வாக்காளர்களில் சிலர் தெரிவிக்கின்றனர். வெளியூரில் வசிக்கும் வாக்காளர்களுக்கு வந்து செல்ல பயணச்செலவு தருவதாக கூறி, அவர்களை அழைத்து வர கட்சியினர், அதற்கான ஏற்பாடுகளை கிளைக் கழக செயலாளர்களைக் கொண்டு செய்து வந்தனர்.
வாக்குப்பதிவு முடியும் வரை, திமுகவினருக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் முழுக்கவனம் செலுத்தி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதி வாக்காளர்கள் வாக்களித்து விட்டார்களா என்பதை, அவர்களுக்கான வாட்ஸ் ஆப் குழுவில் அப்டேட் செய்ய, அக்கட்சியினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, ‘பாமகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? ’ என்று எதிர்த்தரப்பில் ஆங்காங்கே கூட்டம் நடத்தி, ஆளும் தரப்பினருக்கு கடும் நெருக்கடி அளித்திருந்தனர்.
“கடந்த ஆட்சியில் நடைமுறையில் இருந்த வன்னியர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு கைவிடப்பட்டது. மேலும் தாலிக்கு தங்கம் திட்டம், மகளிருக்கு இரு சக்கர வாகனத்துக்கு மானியம் போன்ற திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. இதைபோல அடுத்து வரும் அரசு தற்போதுள்ள திட்டத்தை தொடரும் என்பதற்கு உத்தரவாதமில்லை” என்று பாமக தரப்பு பிரச்சாரம் மேற்கொண்டது கவனிக்கத்தக்கதாக உள்ளது.
இந்த முக்கிய இரு கட்சிகளுக்கு இடையே, நாம் தமிழர் கட்சியினர் திமுகவை சகட்டுமேனிக்கு விமர்சித்தபடி முதல் வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து வாக்கு சேகரித்தனர். மாநில அங்கீகாரம் பெற்றபின் அக்கட்சி சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் சீமான் தினமும் மாலை வேளையில் நடைபெறும் பிரச்சாரத்தில் கட்சியின் கொள்கை, இன்றைய அரசியல் உள்ளிட்டவற்றை பேசி வந்தார்.
இடைத்தேர்தலை என்றாலே ஆளும்கட்சி வெற்றி பெறும் என்பதை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மாற்றியது போல விக்கிரவாண்டியிலும் மாறுமா என்ற கேள்விக்கு இப்போதைக்கு பதில் இல்லை. ஆனாலும், எக்கட்சி வெற்றிபெற்றாலும் குறைந்த வாக்குவித்தியாசத்தில்தான் விக்கிரவாண்டியில் வெற்றி பெற முடியும் என்பதுதான் கள நிலவரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT