Last Updated : 09 Jul, 2024 05:04 PM

 

Published : 09 Jul 2024 05:04 PM
Last Updated : 09 Jul 2024 05:04 PM

திருவள்ளூர் விவகாரம்: தீக்குளித்த இளைஞரின் உடலை வாங்க 3-வது நாளாக மறுப்பு - குடும்பத்தினர் கோரிக்கை என்ன?

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்து, தீக்குளித்து இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட அதே இடத்தில் பட்டா வழங்கக் கோரி மூன்றாவது நாளாக, அவரது குடும்பத்தினர் இளைஞரின் உடலை வாங்க மறுத்து வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே கோட்டக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணி. பர்மா அகதியான இவரது வீடு, வண்டிப்பாதையை ஆக்கிரமித்து உள்ளதாக கூறி வருவாய்த்துறையினர் கடந்த 4-ம் தேதி ஆக்கிரமிப்பை அகற்றச் சென்றனர். அப்போது கல்யாணியின் மகன் ராஜ்குமார் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து உடலில் பெட்ரோல் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த காயமடைந்த ராஜ்குமார் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் கடந்த 7- ம் தேதி அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கிடையே, ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது கவனக்குறைவாக செயல்பட்டதாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர், எளாவூர் வருவாய் ஆய்வாளர், தேர்வழி கிராம நிர்வாக அலுவலர் ஆகிய மூவரையும் பணியிட மாற்றம் செய்தார் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர். இந்நிலையில், ராஜ்குமாரின் உயிரிழப்புக்கு அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவரது குடும்பத்தினர் மூன்றாவது நாளாக ராஜ்குமாரின் உடலை வாங்க மறுத்து வருகின்றனர்.

மேலும், தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக செவ்வாய்க்கிழமை ராஜ்குமாரின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர். அச்சந்திப்பில், நிவாரணமாக ரூ.50 ஆயிரம், மாற்று இடம், ராஜ்குமாரின் மனைவிக்கு தற்காலிக பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதை ஏற்க மறுத்துள்ள ராஜ்குமாரின் தாய் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் பட்டா வழங்கி வீடு கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கை நிறைவேற்றும் வரை ராஜ்குமாரின் உடலை வாங்க மாட்டோம் எனவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x