Published : 09 Jul 2024 04:25 PM
Last Updated : 09 Jul 2024 04:25 PM

“விக்கிரவாண்டி தேர்தல் அலுவலர் பஞ்சாயத்துத் தேர்தலைக் கூட நடத்தத் தகுதி இல்லாதவர்” - அன்புமணி

தாம்பரம் அருகே திருவஞ்சேரியில் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மாநில அளவிலான தரவரிசை பேட்மிண்டன் போட்டியை அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார் | படங்கள்: எம்.முத்துகணேஷ்

தாம்பரம்: “விக்கிரவாண்டி தேர்தல் அலுவலர் பஞ்சாயத்துத் தேர்தலைக் கூட நடத்துவதற்கு தகுதியில்லாதவர்.” என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

தாம்பரம் அருகே திருவஞ்சேரியில் உள்ள ஸ்பார்க் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான மாநில அளவிலான தரவரிசை பேட்மிண்டன் போட்டிகள் செவ்வாய்க்கிமை நடைபெற்றது. இதில் மாநில இறகுப் பந்து கழக தலைவரும், பாமக தலைவருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி போட்டியை தொடங்கி வைத்தார். போட்டிகளை தொடங்கி வைத்து சிறிது நேரம் திரைப்பட இயக்குநர் லிங்குசாமியுடன் அவரும் இறகுப் பந்து விளையாடினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, “தமிழக வீரர்கள் ஒலிம்பிக்கில் போட்டியிட்டு வெல்வதற்கு மாவட்டம் தோறும் இறகுப் பந்துக்கான உள் விளையாட்டு அரங்கு அமைத்து வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதிக்கு கோரிக்கை வைக்கிறேன். விக்கிரவாண்டி தேர்தலை நடத்த வேண்டிய அவசியமே இல்லை. அங்குள்ள தேர்தல் அதிகாரி ஒரு பஞ்சாயத்துத் தேர்தலை நடத்தக்கூட தகுதி இல்லாதவர். விக்கிரவாண்டியில் பணத்தையும், பொருளையும் அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றனர்.

எதையும் கண்டும் காணாமல் தேர்தல் அலுவலர் உள்ளார். தமிழக தேர்தல் ஆணையரும் விக்கிரவாண்டி வந்து என்ன நடந்து கொண்டிருக்கிறது என பார்க்காமல் அலுவலகத்தில் டீ, பிஸ்கெட் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். திமுகவினர் 400-க்கும் மேற்பட்ட தேர்தல் பணிமனைகளை ஒவ்வொரு ஊரிலும் பல லட்சம் செலவில் அமைத்துள்ளனர். இது ஒன்றே திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய போதுமானது. எதிர்கட்சியினர் கூட்டத்துக்கு யாரும் போகக்கூடாது என்பதற்காக ஆடு மாடுகளைப் போல் மக்களை பணம் கொடுத்து அடைத்து வைத்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருமாவளவன் கூறிய கருத்துகளை நானும் வரவேற்கின்றேன். சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். அதேபோல் கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு நான் சிபிஐ விசாரணை கோரினேன். அதனை ஏற்க திருமாவளவன் தயாரா?” என கேள்வி எழுப்பினர்.

மேலும் பேசிய அவர், “தமிழக சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டுக்கு போதைப்பொருட்கள் தான் காரணம். கூலிப்படை கலாசாரத்தை வேரோடு ஒழிக்க வேண்டும். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சென்னை ஆணையர் அருண் என்ன செய்கிறார் என்று பார்ப்போம். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 சட்டங்கள் குறித்து பாமக ஆய்வு நடத்தி வருகிறது. அதில் சில நன்மைகளும் உள்ளன. இருப்பினும் அதுகுறித்து தற்போது கருத்துச் சொல்ல முடியாது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x