Last Updated : 09 Jul, 2024 01:14 PM

1  

Published : 09 Jul 2024 01:14 PM
Last Updated : 09 Jul 2024 01:14 PM

தமிழகத்தில் கள்ளுக்கடைகளை திறக்க வலியுறுத்தி வியாபாரிகள் சங்க பேரவை ஆர்ப்பாட்டம் @ சென்னை

சென்னை: தமிழகத்தில் மீண்டும் கள்ளுக்கடைகளை திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் இன்று (ஜூலை 9) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை அறவே ஒழிக்க வேண்டும். கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும். பூரண மதுவிலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் சென்னை எழும்பூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில பொருளாளர் சி.பொன்னுசாமி தலைமை வகித்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அருண் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பூரண மதுவிலக்கை நோக்கிச் செல்லும் பயணத்தில் எதற்காக கள்ளுக்கடைகளை திறக்கக் கோருகிறோம். போதைக்கு மாற்று போதையா என்ற கேள்வி கண்டிப்பாக வரும். இதை நான் சொல்லவில்லை. அமைச்சர் முத்துசாமி சொல்லியிருக்கிறார். மதுப்பிரியர்கள் குடியை நிறுத்திவிட்டால் அவர்களுக்கு கஷ்டமாக இருக்கும். அதனால் பூரண மது விலக்கை அமல்படுத்தவில்லை எனக் கூறியிருக்கிறார்.

அதேபோல கனிமொழி எம்பி-யும், "திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அனைத்து மதுக்கடைகளையும் மூடிவிடுவோம்" என்று சொல்லி இருந்தார். ஆனால், அதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கள்ளச்சாராயத்தால் 65 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், இன்னும் கள்ளச் சாராய விற்பனையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இத்தவறுகளை மறைக்க ரூ.10 லட்சம் இழப்பீடு. யாருடைய வரிப் பணத்தில் இதைச் செய்கின்றனர். விரைவில் குடிகார மாநிலமாக தமிழகம் மாறும்.

எனவே பூரண மதுவிலக்கை நோக்கிச் செல்லும் பயணத்தில் மதுப் பிரியர்களால் உடனடியாக குடியை நிறுத்த முடியாது. அதற்கு சில கால அவகாசம் தேவை. இதையொட்டியே கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஏற்கெனவே கள்ளுக்கடைகளை திறக்க முற்பட்டபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த முறை குண்டுகளை நெஞ்சில் வாங்கிக் கொள்ளவும் தயாராக இருக்கிறோம்” என அருண்குமார் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x