Published : 09 Jul 2024 04:59 AM
Last Updated : 09 Jul 2024 04:59 AM

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை: சென்னை புதிய காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை

சென்னை மாநகர காவல் ஆணையர் அருண்

சென்னை: சென்னை காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி அருண் பொறுப்பேற்றுக் கொண்டார். ரவுடிகளை ஒழிக்க ரவுடிகளின் மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதமும் நேற்று பொறுப்பேற்றார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம்தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீடு அருகே கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். தலைநகரிலேயே இந்த அசம்பாவிதம் நடைபெற்றதால் சட்டம் - ஒழுங்கு பற்றி எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, திமுக கூட்டணி கட்சிகளும் விமர்சித்தன.

110-வது காவல் ஆணையர்: இதன்தொடர்ச்சியாக சென்னைபெருநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப்ராய் ரத்தோரை காவலர் பயிற்சிக் கல்லூரி டிஜிபியாக பணியிட மாற்றம் செய்து, தமிழக உள்துறை செயலர் அமுதா நேற்று உத்தரவு பிறப்பித்தார். சென்னை பெருநகர காவல் ஆணையராக, சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த ஏ.அருண் நியமிக்கப்பட்டார். சென்னையின் 110-வது காவல் ஆணையராக அவர் நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அருண் கூறியதாவது: சென்னை மாநகரத்தில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட முன்னுரிமை அளிக்கப்படும். நடந்த குற்றங்களை கண்டுபிடிக்கவும், குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ரவுடிகளை கட்டுப்படுத்துவதே என் முதல் பணியாக இருக்கும். போலீஸார் கடமையை சரியாகசெய்தாலே, குற்றங்கள் குறையும்.

ரவுடிகள் ஒடுக்கப்படுவார்கள். ரவுடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும். என்னை நம்பி இந்தபொறுப்பை ஒப்படைத்த முதல்வரின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அருண் 1998-ம் ஆண்டு பிரிவுஐபிஎஸ் அதிகாரி. சேலம் மாவட்டம்அஸ்தம்பட்டி சின்ன திருப்பதி அவரது ஊர். நடுத்தர விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். மனைவி ஐஆர்எஸ் அதிகாரி. 2 மகள்கள் உள்ளனர்.

1998-ல் உதவி எஸ்பியாக நாங்குநேரி, தூத்துக்குடியில் பணியாற்றினார். 2002-ல் எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று கரூர், கன்னியாகுமரியில் பணியாற்றினார். துணை ஆணையராக சென்னை அண்ணா நகர், பரங்கிமலையிலும் எஸ்.பி.யாக சிபிசிஐடி பிரிவு, திருப்பூர், போதைப் பொருள் தடுப்பு பிரிவிலும் பணியாற்றினார்.

2012-ல் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று தலைமையிடம், சென்னை போக்குவரத்து வடக்கு, சட்டம் - ஒழுங்கு தெற்கு, திருச்சி சரகத்தில் பணியாற்றினார். 2016-ல் ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி காவல் ஆணையர், சென்னை போக்குவரத்து கூடுதல்காவல் ஆணையர், வட சென்னைகாவல் ஆணையர், காவலர் பயிற்சி பள்ளி ஆகிய பொறுப்புகளை வகித்தார்.

2023-ல் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று சிவில் சப்ளைசிஐடி, ஆவடி காவல் ஆணையர், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபிஉள்ளிட்ட பதவிகளில் பங்களிப்பை செலுத்தினார்.

பல மாவட்டங்களில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்கி,சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டியதில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏடிஜிபி டேவிட்சன்: இதேபோல, தமிழக காவல் துறையின் தலைமையிட கூடுதல் டிஜிபியாக இருந்த எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம் சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

டேவிட்சன் தேவாசீர்வாதம் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் முதலூரை சேர்ந்தவர். சென்னை லயோலா கல்லூரியில் இளநிலை, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் முதுநிலை சமூகவியல் பட்டம் பெற்றார்.

1995-ம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான இவர் உதவிஎஸ்.பி.யாக தருமபுரி, பரமக்குடியில் பணியாற்றினார். பின்னர் பதவி உயர்வு பெற்று கோவை துணை ஆணையர் மற்றும் கடலூர்,கரூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் எஸ்.பியாக பணியாற்றினார்.

மத்திய போதைப் பொருள் தடுப்பு மண்டல இயக்குநர், கோவை சரக ஐ.ஜி. நிர்வாகம், ஐ.ஜி. உளவுப் பிரிவு, மதுரை காவல் ஆணையர், கூடுதல் டிஜிபி உளவுப் பிரிவு என பல்வேறு முக்கிய பொறுப்புகளையும் வகித்துள்ளார். தமிழக அரசின் நன்மதிப்பை பெற்றவர். கண்டிப்பானவர். சிறப்பான பணிக்காக குடியரசுதலைவர் விருது, முதல்வர் விருதுகளை பெற்றுள்ளார். அமெரிக்கா, தாய்லாந்து, ஆஸ்திரியா, சிரியா உட்பட பல்வேறு நாடுகளில் நடந்த கூட்டங்களில் தமிழக காவல்துறை சார்பில் பங்கேற்றுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x