Published : 09 Jul 2024 07:11 AM
Last Updated : 09 Jul 2024 07:11 AM

அமீபா நுண்ணுயிரியால் மூளையழற்சி பாதிப்பு; ஏரி, குளங்களில் யாரும் குளிக்க வேண்டாம்: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: கேரளாவில் அமீபா நுண்ணுயிரியால் மூளையழற்சி பாதிப்பு பரவி வருவதால் தமிழகத்தில் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் யாரும் குளிக்க வேண்டாம் என்று தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

கேரள மாநிலத்தில் அமீபா நுண்ணுயிரியால் ஏற்படும் மூளையழற்சி பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இதுவரை அந்நோய் பாதிப்புக்கு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அசுத்தமான தண்ணீரில் உள்ள அமீபா மூலம் உருவாகும் என்சபலிட்டிஸ் எனப்படும் மூளையழற்சி பாதிப்பு ஏற்படுகிறது. சுகாதாரமற்ற தண்ணீரில் குளிக்கும்போது சுவாசப் பாதைவழியே ஊடுருவிச் செல்லும் அந்த வகை அமீபா, நேரடியாக மூளையில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. காய்ச்சல், வாந்தி, மயக்கம்,தலைவலி, மனக் குழப்பம், பிதற்றல், வலிப்பு போன்றவை முக்கிய அறிகுறிகள் ஆகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேங்கிய நீரிலோ, அசுத்தமானஅல்லது மாசடைந்த நீரிலோபொது மக்களும், குறிப்பாககுழந்தைகளும் குளிக்கக்கூடாது.குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள்அனைத்தும் தூய்மையான சூழலில் இருப்பதை உள்ளாட்சிஅமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். தனியார் மற்றும் அரசுநீச்சல் குளங்கள் அனைத்தும் அரசு வழிகாட்டுதலின்படி தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

தண்ணீரில் குறிப்பிட்ட அளவு குளோரின் கலந்திருத்தல் வேண்டும். நீர் நிலைகள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நீர்நிலைகளில் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் தடைவிதிக்க வேண்டும். மூளையழற்சி அறிகுறிகளுடன் மருத்துவமனைகளுக்கு வருபவர்களை தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். உயர்சிறப்பு சிகிச்சைகள் தேவைப்படுவோருக்கு அந்த வசதிகள் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x