Published : 15 May 2018 09:58 AM
Last Updated : 15 May 2018 09:58 AM

குப்பையில் இருந்து உரம் தயாரிக்க ரூ.12.5 கோடியில் 9 நகராட்சியில் நுண் உர செயலாக்க மையம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 9 நகராட்சிகளில் ரூ.12.55 கோடி மதிப்பீட்டில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்க (இயற்கை உரம்) நுண் உர செயலாக்க மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதனால் தினமும் சேகரமாகும் குப்பை அந்தந்த இடங்களிலேயே உரமாக்கப்பட உள்ளன.

குடியிருப்புகளில் இருந்து சேகரிக்கப்படும் டன் கணக்கிலான கழிவுகள், குப்பைகள் அந்தந்தப் பகுதி உள்ளாட்சி எல்லையில் உள்ள குப்பைக் கிடங்குகளில் கொட்டி மக்க வைத்து, திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் அந்த இடங்களில் குப்பையை எரிப்பதால் நிலத்தடி நீர் மாசு, சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, குப்பைக் கழிவுகளை நவீன முறையில் மேலாண்மை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, குடியிருப்பு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகளை தரம் பிரித்து, நுண் உர செயலாக்க மையங்கள் மூலம் திடக்கழிவு மேலாண்மை செய்யும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9 நகராட்சிகளில் தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்ட நிதியின்கீழ், 29 இடங்களில் ரூ.12 கோடியே 55 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் நுண் உர செயலாக்க மையங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக அனகாபுத்தூர், பம்மல் நகராட்சியில் இத் திட்டம் செயல்படுகிறது.

இதுகுறித்து, செங்கை மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் இளங்கோவன் கூறியதாவது: ‘காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், மறைமலை நகர் உள்ளிட்ட 9 நகராட்சிகளில் நுண் உர செயலாக்க மையம் தொடங்கப்பட உள்ளன. குடியிருப்புப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள், கழிவுகளைத் தரம் பிரித்து, அங்கேயே அமைக்கப்படும் நுண் உர செயலாக்க மையத்துக்கான தொட்டிகளில் கொட்டி, மக்கிய உரமாக மாற்றப்படும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x