Last Updated : 19 May, 2018 08:22 PM

 

Published : 19 May 2018 08:22 PM
Last Updated : 19 May 2018 08:22 PM

ஆளுநர்கள் மூலம் ஆட்சி செய்யலாம் என நினைத்த பாஜகவுக்கு அடி: நாராயணசாமி

ஆளுநர்களை வைத்து ஆட்சி செய்யலாம் என்று நினைத்த பாஜகவுக்கு தற்போது மிகப்பெரிய அடி கிடைத்துள்ளது. அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட கர்நாடக ஆளுநர் இனியும் பதவியில் தொடரக்கூடாது என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ்-மதச் சார்பற்ற ஜனதாதளம் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது இது தொடர்பாக புதுவை முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:

''கர்நாடகத்தில் மாநில ஆளுநரை தங்கள் கையில் போட்டுக்கொண்டு செயல்பட்ட பாஜக முழு தோல்வி அடைந்துள்ளது. மத்தியில் உள்ள பாஜக தலைவர்கள் இந்தத் தோல்விக்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தால் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ், மதச் சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி பேரம் பேச நினைத்த எடியூரப்பா மிகப்பெரிய தோல்வியைத் தழுவியுள்ளார். இது பாஜகவுக்கு மிகப்பெரிய அடியாகும். இதன் மூலம் பாஜகவின் உண்மையான சுயரூபம் வெளிவந்துள்ளது.

ஆளுநர்களை வைத்து ஆட்சி செய்யலாம் என்று நினைத்த பாஜகவுக்கு இது மிகப்பெரிய அடியாக உள்ளது. தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த கர்நாடக ஆளுநர் மனசாட்சி இருந்தால் இனியும் ஒரு நிமிடம் கூட பதவியில் தொடரக்கூடாது. காங்கிரஸ்-மதச் சார்பற்ற ஜனதாதளம் இப்போது பெற்ற வெற்றி மூலம் மதச் சார்பற்ற அணிகள் ஒருங்கிணைந்தால் மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.

இனிமேல் பாஜக பண பலம், அதிகார பலம் வைத்து பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைக்கும் எண்ணத்தை முழுமையாக மறக்க வேண்டும். இது பாஜகவுக்கு மிகப்பெரிய பாடமாக இருக்க வேண்டும்.''

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x