Published : 08 Jul 2024 06:49 PM
Last Updated : 08 Jul 2024 06:49 PM
சேலம்: ''மத்திய, மாநில அரசுகள் கடமையை சரியாக செய்தால் இபிஎஸ் சிறைக்குச் செல்வார்'' என பெங்களூரு புகழேந்தி கூறியுள்ளார்.
இது தொடர்பாக பெங்களூரு புகழேந்தி சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. எனவே, தமிழக முதல்வர் ஸ்டாலின் அச்சுறுத்தல் உள்ள தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இனி வரும் காலங்களில் உயிரிழப்பை தவிர்க்கலாம். இது சம்பந்தமாக தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி சிலரோடு கூட்டு வைத்து கொண்டு தேர்தலில் போட்டியிடவில்லை. தற்போது சீமான் தன்னிலை மாறி பழனிசாமியிடம் ஆதரவு கேட்கிறார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா பெயரை சொல்லித்தித்தான் பாமக-வும் வாக்குக் கேட்கிறது. ஜெயலலிதாவை திட்டியவர்கள், தற்போது அவரது பெயரை பயன்படுத்தி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்கு சொல்லி வாக்குக் கேட்கிறார்கள். அதைப் பார்த்துக்கொண்டு ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோர் மவுனம் காக்கின்றனர்.
எம்ஜிஆர், ஜெயலலிதா போட்டியிட்ட தேனி ஆண்டிபட்டியில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகியுள்ளது. அடுத்த தேர்தலில் இரட்டை இலை சின்னமும் போய்விடும். பழனிசாமியை தேடி நான் போக மாட்டேன். 30 ஆண்டு கால நட்பில், பழனிசாமியிடம் ஒரு உதவி, காண்ட்ராக்ட் என எதையும் கேட்டதில்லை. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பழனிசாமியுடன் உள்ள தொண்டர்களே விரும்புகிறார்கள்.
பழனிசாமி நம்பிக்கை துரோகி என தெரிந்துகொள்ள அண்ணாமலைக்கு 2 ஆண்டுகள் ஆயிற்றா? இதற்குத்தான் அண்ணாமலை வெளிநாடு எல்லாம் சென்று படித்தாரா? மோடியின் அருகில் உட்காரும் போதே எப்படி முதுகில் குத்துவது என்று பழனிசாமி பார்த்துவிட்டார். பழனிசாமி செய்தது ஈடு இணையற்ற துரோகம். சசிகலா செய்த தவறால், அதிமுக பழனிசாமியிடம் சிக்கிக் கொண்டது. பெரியாரை வைத்து அரசியல் செய்தால்தான் பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியும்.
இன்னும் 15, 20 நாட்களில் அதிமுகவில் உட்கட்சிப் பூசல் வெடிக்கப்போகிறது. ஓபிஎஸ் ராமநாதபுரத்தில் தனியாக நின்றதில் விருப்பம் இல்லாமல் நான் வெளியே வந்தேன். அண்ணாமலை சொல்வதையே ஓபிஎஸ் செய்கிறார். நாங்கள் சொன்னதை கேட்காமல் அண்ணாமலை சொன்னதை கேட்டதால்தான் ஓபிஎஸ் தோல்வி அடைந்தார்.
மத்திய, மாநில அரசுகள் தங்களது கடமையைச் சரியாக செய்தால் இபிஎஸ் சிறைக்குச் செல்வார். அப்போது, கட்சியை எளிதாக ஒருங்கிணைத்து விடுவோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT