Published : 08 Jul 2024 05:10 PM
Last Updated : 08 Jul 2024 05:10 PM

புதிய குற்றவியல் சட்டங்கள்: மாநில அளவில் திருத்தங்களுக்காக ஒருநபர் குழு அமைத்தது தமிழக அரசு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனக் கூட்டம் நடந்தது.

சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடைமுறையில் இருந்த வந்த நிலையில், மத்திய அரசால் அவை “பாரதிய நியாய சன்ஹிதா, 2023”, “பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023” மற்றும் “பாரதிய சாக்‌ஷியா சட்டம், 2023” என மாற்றப்பட்டு, ஜூலை 1 முதல் இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக, சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தில், முறையான விவாதங்கள் ஏதுமின்றியும், மாநிலங்களின் கருத்துகளைக் கேட்காமலும், அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டங்களின் பல்வேறு பிரிவுகளை எதிர்த்து நாடெங்கும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

நாடாளுமன்றத்தில் 146 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துவிட்டு, மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை அறிந்துகொள்ள விருப்பமில்லாமல், மத்திய அரசு அவசர கோலத்தில் இச்சட்டங்களை நாடாளுமன்றத்தில் விவாதங்கள் ஏதுமின்றி, கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவேற்றியது. நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையினரின் கருத்தினைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தப் புதிய சட்டங்களில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பதைத் தெளிவாக தமிழக முதல்வர் தனது 17-6-2024 நாளிட்ட கடிதத்தின் வாயிலாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஏற்கெனவே தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் இந்த புதிய சட்டத்தின் சில அடிப்படைப் பிரிவுகளில் தவறுகள் இருப்பதோடு, மாநில அரசுகளிடமிருந்து முழுமையாக கருத்துகளைப் பெறாமல் இவை இயற்றப்பட்டுள்ளதாக தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்த முதல்வர், இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என்றும், முறையாக அனைத்து மாநில அரசுகளின் கருத்துகளைப் பெற்ற பின்னரே இவ்விஷயத்தில் முடிவெடுக்க வேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், தமிழக அரசின் சார்பில் இப்புதிய சட்டங்களில் என்னென்ன சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று (ஜூலை 8) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர், தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர், தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், பொதுத் துறைச் செயலாளர், சட்டத்துறை செயலாளர், காவல்துறை இயக்குநர் மற்றும் அரசு குற்றவியல் வழக்குரைஞர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில், இந்தப் புதிய சட்டங்களில் மாநில அளவில் பெயர் மாற்றம் உட்பட என்னென்ன திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்பதை ஆராய்ந்து, அரசுக்குப் பரிந்துரைத்திட, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழுவினை அமைத்திட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இக்குழு இந்தப் புதிய சட்டங்கள் குறித்து தெளிவாக ஆராய்ந்து, மாநில அளவில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து, மாநில அளவில் என்னென்ன திருத்தங்களைக் கொண்டு வரலாம் என்பது பற்றிய தனது அறிக்கையை ஒரு மாத காலத்துக்குள் அரசுக்கு வழங்கும் என்று அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x