Last Updated : 08 Jul, 2024 03:34 PM

2  

Published : 08 Jul 2024 03:34 PM
Last Updated : 08 Jul 2024 03:34 PM

“காவல்துறை அதிகாரிகளை மாற்றுவதால் மட்டும் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மாறிவிடாது” - இபிஎஸ் விமர்சனம்

சேலத்தை அடுத்த ஓமலூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

சேலம்: “தமிழகத்தில் காவல் துறை அதிகாரிகளை மாற்றுவதால் மட்டும் சட்டம் - ஒழுங்கு மாறிவிடாது,” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தை அடுத்த ஓமலூரில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் அமமுக வைச் சேர்ந்தவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, “தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. காவல்துறை அதிகாரிகளை மாற்றுவதால் மட்டும் சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்படாது. காவல் துறையை கையில் வைத்துள்ள தமிழக முதல்வர் சிறப்பாக செயல்படவில்லை. தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை. போதைப் பொருள் விற்பனை தாராளமாக இருக்கிறது.

காவல் துறையினருக்கு முழு சுதந்திரம் கிடையாது. அவர்களுக்கு முழு சுதந்திரம் இருந்தால் மட்டுமே சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க முடியும்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தக் கொலையில் எவரும் கைது செய்யப்படவில்லை. அவர்களாகவே சரணடைந்துள்ளனர். இந்த கொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு இருப்பதாகவே செய்திகள் வந்துள்ளன.” என்றார்.

தொடர்ந்து , “ஓபிஎஸ் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது; அவர் அதிமுகவிலிருந்து விலக்கப்பட்டு விட்டார்” என்று சொன்ன பழனிசாமியிடம், ஜெயலலிதா காலத்தில்கூட கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளனரே... அதுபோல ஏன் இப்போது கட்சியில் யாரும் மீண்டும் சேர்க்கப்படவில்லை? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஜெயலலிதா காலத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் கட்சி அலுவலகத்தை உடைக்கவில்லை, கட்சி வாகனத்தை நொறுக்கவில்லை, கட்சிப் பொருளை திருடவில்லை. ஆனால் இப்போது நடந்திருப்பது வேறு” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “முன்னாள் அமைச்சர் எ.ஆர்.விஜயபாஸ்கர் மீது போடப்பட்டது சிவில் வழக்கு. இதை கிரிமினல் வழக்கு போல மிகைப்படுத்துகின்றனர். அதிமுகவினரை பழிவாங்கும் நோக்கில் இது போன்று வழக்குகள் ஜோடிக்கப்படுகின்றன. சேலத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அணைமேடு ரயில்வே மேம்பாலம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் மேம்பாலத்தை திறக்காமல் கிடப்பில் போட்டிருக்கிறார்கள்” என்றார். இந்த பேட்டியின்போது முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உட்பட அதிமுகவினர் பலர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x