Published : 08 Jul 2024 02:40 PM
Last Updated : 08 Jul 2024 02:40 PM
சென்னை:“தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பில்லை. சட்டம் - ஒழுங்கு இன்னும் உறுதியாக இருக்க வேண்டும். குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்” என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் இன்று (திங்கள்கிழமை) அவர் அளித்த பேட்டியில், “தமிழக காவல்துறையில் சில மாற்றங்களை கொண்டு வந்து இருகிறார்கள். சென்னை மாநகர காவல் ஆணையராக அருண், கூடுதல் சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி-யாக டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆகியோர் பொறுப்பேற்க உள்ளனர். இனிவரும் காலங்களில் அரசுக்கு எந்தவிதமான கெட்ட பெயர் ஏற்படாமலும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையிலும் காவல்துறை செயல்பட வேண்டும்.
பாஜகவினர் தேர்தல் பத்திரம் மூலம் ஊழல் செய்தனர். மேலும் நிதி நிறுவனங்களை அபகரித்து, ஏழை, எளிய மக்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி டெபாசிட் என்ற முறையில் பணம் பெற்று ஏமாற்றுபவர்களுக்கு அடைக்கலம் தருகிறார்கள்.
வழக்கு ஒன்றில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட பிறகு அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவருக்கு கட்சியில் மாநில பொறுப்பு தருகிறார்கள். அவர் மத்திய அமைச்சரை சந்திக்கிறார். பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவில் கலந்துகொள்கிறார். இது எதைக் காட்டுகிறது என்றால், 'நீங்கள் ஏழை மக்களை ஏமாற்றி கொள்ளையடியுங்கள். உங்களுக்கு நாங்கள் பாதுகாப்பு தருகிறோம்' என்பது போல இருக்கிறது. இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தான் பாஜகவின் சித்தாந்தமாக உள்ளது. நீதி, நியாயம் பேசினால் மிரட்டுகிறார்கள்.
தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பாதுகாப்பில்லை. எனவே, குற்றங்கள் நடக்கும் முன்னரே காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் சில நாட்களுக்கு முன்பு நடந்த கொலை குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரிக்க வேண்டும். இந்தக் கொலை தொடர்பாக எங்களுக்கு கிடைத்த தகவல்களையும் தெரிவித்துள்ளோம். ஆருத்ரா நிதி நிறுவனம் தொடர்பாகவும் கடந்த இரண்டு நாட்களாகப் பேசப்பட்டு வருகிறது. எனவே, அந்த நிறுவனத்திடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT