Last Updated : 08 Jul, 2024 12:45 PM

 

Published : 08 Jul 2024 12:45 PM
Last Updated : 08 Jul 2024 12:45 PM

கோவை மேயர் ராஜினாமா | மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஏற்பு

கோவை மாமன்றக் கூட்டம்

கோவை: சொந்தக் காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த கோவை மேயர் கல்பனா ஆனந்தக்குமாரின் ராஜினாமா கோவை மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஏற்கப்பட்டது.

கோவை மாநகராட்சியின் மேயராக 19-வது வார்டு கவுன்சிலர் கல்பனா ஆனந்தகுமார் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் உடல்நிலை மற்றும் குடும்ப சூழல் உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்களுக்காக தனது மேயர் பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த வாரம், மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரனிடம் கல்பனா தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

இதைத் தொடர்ந்து “ஜூலை 8-ம் தேதி சிறப்பு மன்றக் கூட்டம் நடத்தப்பட்டு ராஜினாமா கடிதம் ஏற்பது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என ஆணையர் அறிவித்தார். அதன்படி, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா கூட்டரங்கில் சிறப்பு மாமன்றக் கூட்டம் இன்று (8-ம் தேதி) நடந்தது.

இந்தக் கூட்டத்துக்கு துணைமேயர் ரா.வெற்றிச்செல்வன் தலைமை வகித்தார். ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, மேயர் பதவியை கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்தது தொடர்பாக சிறப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு கவுன்சிலர்கள் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து மேயர் கல்பனா ஆனந்தகுமாரின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அப்போது அதிமுக மாமன்றக் குழு தலைவர் பிரபாகரன் எழுந்து, மேயர் ராஜிமானாவுக்கான காரணத்தை கேட்டார். அதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து கூட்டம் நிறைவு பெற்றது.

இதைத் தொடர்ந்து அதிமுக மாமன்றக் குழு தலைவர் பிரபாகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கோவை மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமார் செயலற்ற மேயராக இருந்தார் என்று பலமுறை சொன்னோம். ஆனால், இப்போது தான் அவரைப் பற்றி திமுகவுக்கு தெரியவந்துள்ளது மாநகராட்சியில் பல்வேறு ஊழல்கள் நடைபெறுவதை பலமுறை சுட்டிகாட்டியுள்ளோம். மேயர் ஏன் ராஜினாமா செய்துள்ளார் என்பதை அரசு தனி குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும்.

அவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் என்னென்ன ஊழல்களில் ஈடுபட்டுள்ளார் என்பதையும் விசாரிக்க வேண்டும். மேயர் இல்லாத சமயத்தில் பல்வேறு முறைகேடுகள் நடக்கும் எனவே ஆனையர் நேரடியாக கண்காணிக்க வேண்டும். பழைய மேயர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவரை மறைத்து வைத்திருக்கிறார்கள். வாட்ஸ் அப்பில் குழு அமைத்து டெண்டர் எடுத்த மேயரை எங்காவது பார்த்தது உண்டா? என்ன காரணத்துக்காக ராஜினாமா செய்தார் என்ற முழுவிவரத்தை கூட மன்றத்தில் துணை மேயர் வைக்கவில்லை” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x