Published : 08 Jul 2024 10:45 AM
Last Updated : 08 Jul 2024 10:45 AM

“மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் விழுப்புரத்துக்கு திமுக அநீதி” - அன்புமணி கண்டனம்

மகளிர் உரிமைத் தொகை

சென்னை: மகளிர் உரிமைத் தொகை வழங்குவதிலும் விழுப்புரம் மாவட்டத்திற்கு திமுக அரசு அநீதி இழைத்துள்ளது என்றும் தமிழகத்தின் பெரிய மாவட்டங்களில் ஒன்றான விழுப்புரம் மாவட்டத்தில் வெறும் 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் நேற்று பரப்புரை மேற்கொண்ட மாநில விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,“கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்படி விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 60 ஆயிரம் பேர் மாதம் ரூ.1000 நிதியுதவி பெற்று வருகின்றனர்” என்று பேசியுள்ளார். தமிழகத்தின் பெரிய மாவட்டங்களில் ஒன்றான விழுப்புரம் மாவட்டத்தில் வெறும் 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவது சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத்துறை தான். அத்துறையின் அமைச்சராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின் தான். அதனால் அவர் சொல்லும் புள்ளிவிவரம் மிகவும் சரியாகத் தான் இருக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் மிகக்குறைந்த அளவிலானவர்களுக்கு உரிமைத் தொகையை கொடுத்து விட்டு, அதை சாதனை போன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுவது அதிர்ச்சி அளிக்கிறது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் மாநிலம் முழுவதும் 1 கோடியே 16 லட்சம் மகளிர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெறுகின்றனர். அதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் சராசரியாக 3.05 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டின் பெரிய மாவட்டங்களில் விழுப்புரம் மாவட்டமும் ஒன்று. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஏழைகள் வாழும் மாவட்டம் இது தான். அதன்படி பார்த்தால் விழுப்புரம் மாவட்டத்தில் அதிக பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும். ஆனால், சராசரியாக வழங்கப்பட வேண்டிய பயனாளிகளில் ஐந்தில் ஒரு பங்கினருக்கு மட்டும் தான் உரிமைத் தொகை வழங்கப்படுவதாக உதயநிதி ஸ்டாலினின் உரையிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

விழுப்புரம் மாவட்டம் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பின் தங்கிய மாநிலமாக திகழ்கிறது. இந்த மாவட்டத்தில் தான் மிக மிக பின் தங்கிய வன்னியர்களும், ஒடுக்கப்பட்ட பட்டியலினத்தவரும் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர். அப்படிப்பட்ட மாவட்டத்திற்கு மிக அதிக எண்ணிக்கையில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும்.

மாறாக, விழுப்புரம் மாவட்டத்திற்கு மிகக்குறைந்த எண்ணிக்கையில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது என்றால், அது விழுப்புரம் மாவட்டத்திற்கும், விழுப்புரம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கும் இழைக்கப்படும் துரோகம் தானே, அநீதி தானே? இதற்குக் காரணமானவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டாமா?

மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்ட சரியான தருணம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தான். இந்தத் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் திமுக அரசு அதன் தவறுகளையும், துரோகங்களையும் மக்கள் மன்னிக்கவில்லை என்பதை புரிந்து கொண்டு விழுப்புரம் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x