Published : 08 Jul 2024 04:52 AM
Last Updated : 08 Jul 2024 04:52 AM

தமிழகம் முழுவதும் 3,335 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சேதம்: இழப்பீடு வழங்கும் பணிகள் மும்முரம்

கோப்புப் படம்

சென்னை: தமிழகத்தில் அண்மையில் பெய்தகோடை மழை மற்றும் சூறைக்காற்றால் 3 ஆயிரத்து 335 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன என்றுகண்டறியப்பட்டுள்ளது. அதனால், 2.47 ஏக்கருக்கு ரூ.17 ஆயிரம் வீதம் விவசாயிகளுக்கு இழப்பீடுவழங்குவதற்கான நடைமுறைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை மழையால், சூறைக்காற்றால் தோட்டக்கலைப் பயிர்கள் பெரிதும் சேதமடைந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. மழையால், சூறைக்காற்றால் சேதமடைந்த பயிர்களை உடனடியாக கணக்கிட்டு இழப்பீடு வழங்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சேதமடைந்த பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. மாவட்டம் வாரியாக பயிர் சேதத்தை கணக்கிடும் பணிதொடங்கியது. இதில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந் திருப்பது தெரியவந்தது.

கூடுதலாக சேதம்: இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கோடை மழை மற்றும் சூறைக்காற்றால் கடந்தாண்டைவிட இந்தாண்டு தோட்டக்கலைப் பயிர்கள் கூடுதலாக சேதமடைந்திருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும் 26 மாவட்டங்களில் 1,395 ஹெக்டேரில் (ஒரு ஹெக்டேர் என்பது 2.47 ஏக்கர்) பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதில், 1,350 ஹெக்டேரில் (3,335 ஏக்கர்) பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சேதமடைந்துள்ளன. இதுதவிர, பப்பாளி, முருங்கை, மிளகாய், கீரை, மரவள்ளிக் கிழங்கு, புடலங்காய், கத்தரிக் காய் ஆகிய பயிர்களும் சேதமடைந்துள்ளன.

வாழை மரங்களைப் பொருத்தவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக 370ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்தவாழைகள் சேதமடைந்துள்ளன குறைந்தபட்சமாக தூத்துக்குடிமாவட்டத்தில் 0.6 ஹெக்டேரில்வாழைகள் சேதமடைந்திருக் கின்றன. திருச்சி மாவட்டத்தில் 169 ஹெக்டேர், ஈரோடு 125, கோவை 102, ராணிப்பேட்டை 90, தருமபுரி 78, திண்டுக்கல் 48,வேலூர் 53, மதுரை 43, திருப்பத்தூர் மாவட்டத்தில் 52 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த வாழைகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.17 ஆயிரம்வழங்கப்படும். இதர பயிர்களுக்கு அதன் சேதத்துக்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்படும்.

விவசாயிகளுக்கு இழப்பீடு: தமிழகம் முழுவதும் பயிர்களின் சேதம் கணக்கிடப்பட்டு அந்த விவரங்கள் வருவாய் நிர்வாக ஆணையருக்கு கருத்துரு கடந்த ஜூன் மாதம் அனுப்பப்பட்டது. அந்த கருத்துரு பரிசீலனையில் உள்ளது. வருவாய்நிர்வாக ஆணையர் ஒப்புதல்அளித்ததும் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x