Published : 08 Jul 2024 04:59 AM
Last Updated : 08 Jul 2024 04:59 AM

இளைஞர்கள் நம்பும் டிஎன்பிஎஸ்சி பின்னுக்கு தள்ளப்படுகிறதா?

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறையில் உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட பணிகளில் 2,455 காலி இடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு, சில நாட்களுக்கு முன்புஅண்ணா பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்பட்டது. இத்தேர்வில் குளறுபடிகள் நடந்ததாகத் தேர்வர்கள் புகார் எழுப்புகின்றனர்.

முக்கியமாக ஒரு கேள்வி? இதற்கு முன்பு வரை இத்தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்திவந்தது. இம்முறை இத்தேர்வை, அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது ஏன்?

நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர்கூறுகிறார்: “கிராமப்புற மாணவரும் தேர்வில் வெற்றி பெறும் நோக்கிலும், வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவதற்காகவும் இந்தப் பணி அண்ணா பல்கலை.யிடம் ஒப்படைக்கப்பட்டது” (இந்து தமிழ் ஜூலை 1, 2024).இந்த வாசகம் உணர்த்துவது என்ன..?

அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது அரசமைப்பு சட்டம் பிரிவு 315-ன் கீழ்தோற்றுவிக்கப்பட்ட, சாசன அங்கீகாரம் பெற்ற சுய அதிகாரம் கொண்ட தன்னாட்சி அமைப்பு. அவ்வப்போது அரசுத் துறைகளில்எழும் குடிமைப் பணிகள், குடிமைப் பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துதல், தேர்வாணையத்தின் பணி என்று சாசனத்தின் பிரிவு 320 (1) தெளிவாகக் குறிப்பிடுகிறது. ‘குடிமைப் பணிகள்’ என்பவை யாவை? பொதுவாக, பாதுகாப்பு (ராணுவம்) சாராத பணிகள், குடிமைப் பணிகள் ஆகும். இந்த வகையில் நகராட்சித் துறையில் இளம் பொறியாளர் பதவி, குடிமைப் பணியின் கீழ்அடங்கும்; இதற்கான தேர்வை டிஎன்பிஎஸ்சிதான் நடத்த வேண்டும். இதற்கு மாறான தேர்வு நடைமுறை, மிக நிச்சயமாக சாசன நெறிமுறைகளுக்கு மாறானது.

அரசுப் பணிக்குத் தேர்வாணையம்தான் தேர்வு நடத்த முடியும் என்று நிபந்தனை விதிக்கிற சாசனம், தேவையானால் ஆணையத்தின் செயல்தளத்தை விரிவாக்குவதற்கு பிரிவு 321 மூலம் வாய்ப்பு அளிக்கிறது. இதற்கான உதாரணம் சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்திலேயே நடந்தது. மின்சார வாரியப் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வின் கீழ் கொண்டு வரப்பட்டன.

நகராட்சித் துறைப் பணிக்குத் தேர்வு நடத்தும் பொறுப்பை அண்ணா பல்கலைக்கு வழங்குதல், ஒரு வகையில் கொள்கை சார்ந்த முடிவு.

செயலாளர் மட்டத்தில் இதனைத் தீர்மானித்து இருக்க முடியாது. அரசு அல்லதுசம்பந்தப்பட்ட அமைச்சரின் ஒப்புதல் இல்லாமல் இது சாத்தியமே இல்லை. எனவே, டிஎன்பிஎஸ்சியிடம் வழங்காமல் அண்ணா பல்கலை.க்கு இப்பணியை வழங்கும் முடிவு, ஏன், எப்போது யாரால் எடுக்கப்பட்டது; இதுசாசனத்தின் விதிகளுக்கு முரணானது அல்லவா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

இன்னொரு கேள்வி – இத்தகைய தேர்வுகளை நடத்துவதற்கு அண்ணா பல்கலை.க்கு உள்ள ‘அனுபவம்’ என்ன..? ‘பொறியாளர்’ பணி என்பதால் அண்ணா பல்கலை.யிடம்ஒப்படைக்கப்பட்டதா? ஆம் எனில், சட்டத்துறைப் பணிக்கு சட்டப் பல்கலை.க்கும்மருத்துவர் பணியிடங்களுக்கு மருத்துவக் கல்லூரிகளுக்கும் இப்பணி வழங்கப்படுமா? ‘இப்படியே போனால் இதற்கென்று உள்ள தேர்வுவாரியம் / தேர்வு ஆணையத்தின் பணிதான் என்ன?

பெரும்பாலும் ஒப்பந்தக்காரர்கள் மூலமே நகராட்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகிற காலத்தில், அவசர அவசரமாக ஒரு பல்கலை மூலம் தேர்வு நடத்தி பணிக்கு நியமிப்பது எந்த வகையில் சேர்த்தி? இதனால், தேர்வாணையத்தின் மீது அரசுக்கே நம்பிக்கை இல்லை என்று பொருள் படாதா? குற்றம் சாட்டுவது அல்ல; சுட்டிக் காட்டுவதே நமது நோக்கம்.

மாநில அரசுத் துறைகளில் சுமார் 2 லட்சத்துக்கு மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும், மிகச் சில ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படுகின்றன. அவற்றுக்கும், டிஎன்பிஎஸ்சி மூலம் அன்றி, பிற வழிகளில் தேர்வு செய்யும் நடைமுறையைக் கொண்டுவருதல், தேவையற்ற ஐயங்கள், அச்சங்களுக்கே வழிவகுக்கும்.

இத்தகைய முயற்சிகளில் இருந்து விலகி இருத்தலே அரசுக்கு நல்லது. அரசுப் பணிக்காக முழு மூச்சுடன் தயாராகித் தேர்வுஎழுத காத்துக் கொண்டு இருக்கும் இளைஞர்களுக்கு, தேர்வாணையத்தின் மீது நம்பிக்கை கூடுகிற வகையில் செயல்படுதலை அரசு உறுதி செய்ய வேண்டும்.

யுபிஎஸ்சியில், அதன் செயலாளர் முகம் பெரிதாக வெளியில் தெரிவதில்லை; அதன் தலைவர், உறுப்பினர்கள்தாம் ‘வெளியில் தெரியும்’ முகங்களாக இருப்பார்கள். இதனால்தான் தன்னதிகாரம் பெற்ற யுபிஎஸ்சியின் செயல்பாடுகள் பெரும்பாலும் ஐயங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கின்றன. ஆனால், டிஎன்பிஎஸ்சியைப் பொருத்த மட்டில் நிலைமை தலைகீழ். இங்கே அநேகமாக எல்லாமே செயலாளர்தான். டிஎன்பிஎஸ்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அதிகம் ‘தென்படுவதில்லை’. சாசனம் குறிப்பிடும் பொறுப்பில் உள்ளவர்களைப் பின்னுக்குத் தள்ளி, அரசுப் பணியில் உள்ள அலுவலரை முன் நிறுத்துவது முழுமையாக ஏற்புடையது அல்ல.

நிறைவாக, நகராட்சித் துறைத் தேர்வை, தேர்வாணையம் மட்டுமே நடத்த வேண்டும். அதில் ஏதும் சவால்கள் இருப்பின் அவற்றைசரி செய்ய அரசு முயற்சித்தல் வேண்டும்.அரசு மீதும், டிஎன்பிஎஸ்சி மீதும் மக்களுக்கு, தேர்வர்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இதனை அரசே ஏன் மறுதலிக்க வேண்டும்?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x