Published : 08 Jul 2024 05:43 AM
Last Updated : 08 Jul 2024 05:43 AM
சென்னை: மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்தும் வகையில், மத்திய அரசின் ஒப்புதலை பெற்று விரைவில் பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையை தொடர்ந்து, மதுரை, கோவை உள்ளிட்ட நான்கு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய, மாநில அரசிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கெனவே வழங்கி உள்ளது. மதுரை திட்ட அறிக்கை 936 பக்கத்திலும், கோவை திட்ட அறிக்கை 655 பக்கத்திலும் இடம்பெற்றுள்ளன. ரயில் நிலை வகைகள், செலவுகள், செயல்படுத்தும் முறைகள், ரயில் நிலைய அமைவிடங்கள் உள்ளிட்ட விபரங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
மதுரையில் திருமங்கலம் – ஒத்தக்கடை வரை 31.93 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த உள்ளது. 27 கி.மீ. உயர்மட்டப்பாதையில் 23 மெட்ரோ ரயில் நிலையங்களும், 4.65 கி.மீ. சுரங்கப்பாதையில் 3 மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன.
கோவையில் 39 கி.மீ. தொலைவுக்கு அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் உயர்மட்டப்பாதையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட உள்ளது. 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதற்கிடையே, மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி உதவி செய்ய விருப்பம் தெரிவித்துள்ள, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் அதிகாரிகள் மதுரை மற்றும் கோவைக்கு அண்மையில் வந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தவுள்ள இடங்களை காண்பித்து விவரித்தனர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னையை தொடர்ந்து, மதுரையில் ரூ.11,360 கோடியிலும், கோவையில் ரூ.10,740 கோடியிலும் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கையை மாநில அரசு வாயிலாக, மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன், இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை படிப்படியாக தொடங்க திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT