Published : 08 Jul 2024 05:35 AM
Last Updated : 08 Jul 2024 05:35 AM

ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதி மறுப்பு ஏன்? - நீதிமன்ற விவாத விவரம்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூர், பந்தர் கார்டன் தெருவில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி(50) நேற்று முன்தினம் மனு கொடுத்தார். அந்தமனு பரிசீலிக்கப்படாததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் அவசர வழக்கை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நேற்று காலை 9 மணிக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆர்.சங்கரசுப்பு, ஆர்.கிருஷ்ணகுமார் ஆகியோர் ஆஜராகி, ‘‘2 ஆயிரத்து 700 சதுர அடி நிலம் கொண்ட பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் உடலைஅடக்கம் செய்ய அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று வாதிட்டனர்.

அதற்கு அரசு தரப்பில் ஆஜரானகூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ‘‘மனுதாரரின் விண்ணப்பத்தை பரிசீலித்த மாநகராட்சி நிர்வாகம், அதை நிராகரித்துள்ளது. அதற்கு மாறாக மூலக்கொத்தளம் மயானத்தில், 2 ஆயிரம் சதுர அடியை அரசு ஒதுக்கியுள்ளது. அங்கு ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்யலாம்’’ என்று கூறினார்.

ஆவணங்களை படித்து பார்த்த நீதிபதி, ‘‘மனுதாரர் கேட்கும் பந்தர் கார்டன் தெரு மிகவும் குறுகிய மற்றும் குடியிருப்பு நிறைந்த பகுதியாக உள்ளது. இங்கு உள்ள நிலத்தில் உடலை அடக்கம் செய்ய அனுமதித்தால், எதிர்காலத்தில் பிரச்சினைகள் உருவாகும்.

அந்த இடத்தில் நினைவு மணிமண்டபம் கட்டுவீர்கள். ஒவ்வொருஆண்டும் வீர வணக்கம் நிகழ்ச்சிநடத்துவீர்கள். ஆயிரக்கணக்கானோர் அங்கு வந்து குவிந்தால், அப்பகுதி மக்களுக்கு சிரமம் ஏற்படும். கூட்டமாக வருபவர்களின் உயிருக்கு ஆபத்தும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படும்.குடியிருப்புகள் இல்லாத விசாலமான ஒரு இடத்தில் உடலை அடக்கம் செய்யுங்கள்.

அதனால், கட்சிக்காரர்களிடம் அப்படி ஒரு இடம்உள்ளதா? என்று கேளுங்கள் என்றுஉத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை பகல் 12 மணிக்கு தள்ளிவைத்தார். இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலை கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கிய அரசு, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மட்டும் அனுமதி வழங்க மறுக்கிறது.

தற்போது பெரம்பூரில் 7,200 சதுர அடிநிலம் உள்ளது. அதில், அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்’’ என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, ‘‘விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். அவரது கட்சிஅலுவலகம் உள்ள இடம் குடியிருப்புகள் நிறைந்த பகுதி இல்லை. 27 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது என்று அரசு விளக்கம் அளித்துள்ளது. தற்போது பெரம்பூரில் உள்ள 7,200 சதுர அடி நிலமும், குடியிருப்பு நிறைந்த பகுதியாகத்தான் உள்ளது.

அதனால், மூலக்கொத்தளம் சுடுகாட்டில் அரசு தரும் 2 ஆயிரம் சதுர அடி நிலத்தில் உடலை அடக்கம் செய்துவிட்டு, வேறு ஏதாவது ஒருவிசாலமான இடத்தை வாங்கி, அங்கு மீண்டும் அடக்கம் செய்யலாம். இதுகுறித்து மனுதாரர் தரப்பில் கேட்டு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைத்தார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங் உறவினர் லதாவுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் உடலைஅடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்’’ என்று மனுதாரர் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அந்த இடத்தில் உடலை அடக்கம் செய்ய அனுமதி அளித்து கிராம ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு அதற்கான ஆவணம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி பவானி சுப்பராயன், ‘‘சட்ட ஒழுங்கு பிரச்சினை இல்லாமல், அமைதியான முறையில் உடலை ஊர்வலமாக எடுத்து சென்று அடக்கம் செய்யவேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x