Last Updated : 07 Jul, 2024 07:17 PM

4  

Published : 07 Jul 2024 07:17 PM
Last Updated : 07 Jul 2024 07:17 PM

விவாதங்களே இல்லாமல் குற்றவியல் சட்டங்களை மாற்றுவது ஜனநாயக விரோதம்: சு.வெங்கடேசன் எம்.பி.

கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன்.

கோவை: 50-க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில், எந்த விவாதமும் இல்லாமல் 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டின் குற்றவியல் சட்டங்களை மாற்றுவது என்பது முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரான செயல். என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்தார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் இலக்கிய சந்திப்பு, இலச்சினை வெளியீட்டு நிகழ்ச்சி கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் இன்று நடந்தது. மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், எழுத்தாளர் தமிழ்செல்வன் உட்பட பல்வேறு எழுத்தாளர்கள் கவிஞர்கள் பங்கேற்றனர். சங்கத்தின் பொன்விழா இலச்சினை வெளியிடப்பட்டு, எழுத்தாளர் தமிழ்செல்வனின் கதை தொகுப்புகள் வெளியிடப்பட்டன.

நிகழ்ச்சியின் இடையே செய்தியாளர்களிடம் சு.வெங்கடேசன் பேசியதாவது: சி.பி.எஸ்.சி தேர்வு அறிவிப்பில் ஹிந்தி மொழி பாடத்திற்கு 10 சதவீத மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டு விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஹிந்தி அல்லாத மாநில மாணவர்கள் அந்த தேர்வை எழுதினால் எடுத்தவுடன் 10 சதவீத மதிப்பெண்களை இழப்பார்கள். இது மாணவர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாகும்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் இலக்கிய சந்திப்பு, இலச்சினை வெளியீட்டு நிகழ்ச்சி கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் இன்று நடந்தது. எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேசினார். அருகில், மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர்.

இந்திய ஆட்சி மொழி சட்டத்துக்கு எதிரான அறிவிப்பாகும். அறிவிப்பை திரும்பப் பெறவும், தேர்வு விதிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். தேர்தல் முடிவிலும் எந்த பாடத்தையும் பாஜக கற்றுக்கொள்ள வில்லையோ என்ற சந்தேகத்தை தான் மக்களவையில் கடந்த 15 நாட்களாக பார்க்கிறோம்.

இந்திய மக்கள் கடுமையான எதிர்வினையை தேர்தலில் வழங்கியுள்ளனர். அயோத்தி, சித்ரகூடம் ஆகிய பகுதிகளில் பாஜகவிற்கு பாடம் புகட்டியுள்ளனர். ராமர் பிறந்த இடமான அயோத்தி, ராமர் அதிகமாக வனவாசம் செய்த இடம், இந்தியாவில் ராமர் சிலைகள் அதிகமாக இருக்கும் இடமான சித்ரகூடம் பகுதியிலும் பாஜக தோற்கடிக்கப்பட்டுள்ளது. உண்மையான மக்கள் பிரச்சினைக்கு முகம் கொடுத்து, ஒரு நல்லாட்சியை உருவாக்குங்கள் என்பது தான் மக்கள் தீர்ப்பு.

எதிர்க்கட்சியின் குரல், ஜனநாயகத்தின் குரல், சட்ட மரபுகள் காப்பாற்றப்பட வேண்டும், ஆனால் பாஜகவால் தொடர்ந்து சிதைக்கப்பட்டு வருகிறது. 150 எம். பி.,க்கள் மேற்பட்ட இடை நீக்கம் செய்யப்பட்ட காலத்தில், எந்த விவாதம் இல்லாமல் 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டின் குற்றவியல் சட்டங்களை மாற்றுவது என்பது முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரான செயல். அதை திரும்பப்பெற வலியுறுத்தி நாட்டில் அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் போராடி வருகின்றனர்.

மதுரையிலிருந்து கோவைக்கு பகல் நேரத்தில் புதிய ரயில்கள் இயக்கப்படவில்லை. அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்த பின்பும் ரயில் சேவை வழங்கப்படவில்லை. வட மாநிலங்களில் கடந்த 10 ஆண்டுகளில் நான்கு வழிச்சாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட முதலீடுகளில் ஒப்பீடுகளில் 5-ல் ஒரு பங்கு தான் மத்திய அரசால் தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். கார்ப்ரேட் நிறுவனங்களுக்கான சலுகைகள் குறைக்கப்பட வேண்டும். ஏழை, எளிய மக்கள் மற்றும் வணிகர்கள் பாதிக்காத வகையில் ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x