Published : 07 Jul 2024 03:54 PM
Last Updated : 07 Jul 2024 03:54 PM

“ஆம்ஸ்ட்ராங் கொலையில் கூலிப்படையை ஏவியவர்களை கண்டறிய வேண்டும்” - திருமாவளவன்

திருமாவளவன்

சென்னை: “ஆம்ஸ்ட்ராங் இழப்பு பகுஜன் சமாஜ் கட்சிக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த தலித் அரசியலுக்கும் பேரிழப்பாகும். இது கோழைத்தனமான படுகொலை. அவர் கொலையில் கூலிப்படையை ஏவியவர்களை கண்டறிய வேண்டும்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஞாயிற்று கிழமை ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன் பின் பேசிய அவர், “ஆம்ஸ்ட்ராங்கை இழந்தது சகித்துக்கொள்ள முடியாதது. இது கோழைத்தனமான படுகொலை. ஒரு அரசியல் கட்சித் தலைவர் மாலை ஐந்து மணி அளவில் இவ்வளவு கொடுமையாக கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது.

அகில இந்திய அளவில் பல கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர். அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பாஜக தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தி இந்த கொலைக்கு தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.

ஆம்ஸ்ட்ராங் கட்சிக்கு மிகவும் விசுவாசமாக இருந்தார். மக்களுக்கு நம்பிக்கைக்குரிய தலைவராக இருந்தார். தொடர்ந்து 17 ஆண்டுகளாக மாநில தலைவராக இருந்தார். அந்த வகையில் தேசிய தலைவர் மாயாவதி அவர்களுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தவராக இவர் இருந்தார் என்பது தெரிகிறது. எனது அறுபதாவது பிறந்தநாளுக்கு நேரில் வந்து வாழ்த்துக்களை சொல்லியது மட்டுமல்லாமல் பல புத்தகங்களை பரிசாக கொடுத்தார். நீண்ட காலமாக எனக்கு நெருக்கமாக இருந்தவர்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடும் யாராக இருந்தாலும் அவரை நேசிக்கக் கூடியவர் ஆம்ஸ்ட்ராங். சகோதரத்துவத்தை பேணக் கூடியவர். அவர் பௌத்தத்தின் மீது தீரா பற்று கொண்டவர். தமிழகத்தில் பௌத்த நிகழ்வுகளை யார் முன்னெடுத்தாலும் களத்தில் முன் நிற்பவர்.

அவரது இழப்பு பகுஜன் சமாஜ் கட்சிக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த தலித் அரசியலுக்கும் பேரிழப்பாகும் அம்பேத்கரையும் அரசியலமைப்பு சட்டத்தையும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்த்தவர். மிகுந்த ஆர்வமுடன் களப்பணியாற்றியவர். தொடர்பே இல்லாத ஒரு வழக்கில் அவர் குற்றம் சாட்டப்பட்டார். அதன்படியே இந்த கொலை செய்யப்பட்டிருக்கிறது

கொலை செய்தவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. அதனால் தான் மாயாவதி இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்கிறார். காவல்துறை உண்மையான குற்றவாளிகள் யார் என்பதனை கண்டறிய வேண்டும். அவர்களை கைது செய்ய வேண்டும். இது போன்ற படுகொலைகள் தொடர்ந்து நடைபெறுவது அதிர்ச்சி அளிக்கிறது. அதிலும் தொடர்ந்து தலித் இயக்கத்தை சார்ந்தவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். தமிழக அரசு இதன் பின் யார் இருப்பது? கூலிப்படையை ஏவியவர்கள் யார் ? என்பதனை விரைவில் கண்டறிய வேண்டும்.

ஆம்ஸ்ட்ராங் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து தலித் இயக்கங்களோடும் நெருக்கமான நட்பினை கொண்டிருந்தார். எந்த இயக்கத்தையும் போட்டியுடன் அணுக மாட்டார். பொறாமை கொண்டு விமர்சனம் செய்யமாட்டார். கருத்தியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும்தான் அவரது விமர்சனம் இருக்கும். தனிநபர் விமர்சனம் செய்ய மாட்டார்..

அதுவே அவரது மாண்பை எடுத்து சொல்லும் சிறந்த சான்று. அதனால்தான் பகுஜன் கட்சியினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் அவரது இழப்பிற்கு கண்ணீர் சிந்துகிறார்கள். எந்த கட்சிக்கும் செல்லாமல் பகுஜன் சமாஜ் கட்சிக்கு சென்று அம்பேத்கரின் கொள்கைகளை பரப்ப வேண்டும் என அவர் நினைத்தார். இது மிகவும் மகத்தான செயல். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது இழப்பு எந்த நாளும் ஈடு செய்ய முடியாத மற்றும் தாங்கிக்கொள்ள முடியாத இழப்பாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x