Published : 07 Jul 2024 03:47 PM
Last Updated : 07 Jul 2024 03:47 PM

சூரத் விபத்து: பாஜக அரசு வேடிக்கை மட்டுமே பார்க்கப் போகிறதா? - செல்வப்பெருந்தகை

செல்வப்பெருந்தகை

சென்னை: குஜராத் மாநிலம் சூரத் அருகே 5 மாடிகளை கொண்ட கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “குஜராத் மாநிலம் சூரத் அருகே 5 மாடிகளை கொண்ட கட்டிடம் நேற்று இடிந்து விழுந்து தரைமட்டமானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் இவ்விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சச்சின் பாலிகாம் என்ற பகுதியில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களின் குடும்பத்துடன் இந்த அடுக்குமாடி கட்டிடங்களில் தான் வசித்து வருகின்றனர்.

இடிந்து விழுந்த கட்டிடம் 2016-2017 ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடம். கட்டப்பட்டு 6 வருடங்களுக்கு இப்படிப்பட்ட விபத்துக்குள்ளாகியிருப்பதில் இருந்தே அதன் தரம் குறைவாக இருப்பது நன்றாக தெரிகிறது. அதேபோல் அப்பகுதி மக்கள் இந்த கட்டிடம் சட்டவிரோதமாக தான் கட்டப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் குஜராத் தான் என்று பொய்யுரைகளை பரப்பி, மக்களை திசைதிருப்பி அரசியல் செய்துவந்த பிரதமர் மோடியும், குஜராத் மாநில பாஜக முதல்வர் பூபேந்திரபாய் படேல் தற்போது என்ன பதில் கூறப்போகிறார்கள்?. சமீபகாலமாக குஜராத் மாநில மக்கள் பாஜகவின் மக்கள் விரோத ஆட்சியால் ஏராளமான இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள்.

ஏற்கனவே போதைப்பொருட்களின் கூடாரமாக மாறியுள்ள குஜராத் மாநிலம் இப்படிப்பட்ட பேரதிர்ச்சியை தாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அரசு என்ன செய்யப்போகிறது? இதுபோன்ற நிகழ்வுகள் மேலும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? இல்லை எப்போதும் போல பாஜக அரசு வேடிக்கைமட்டும் தான் பார்க்கப் போகிறார்களா?

கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். தரமற்ற கட்டிடத்தால் தான் இந்த நிகழ்வு ஏற்பட்டதா என்று ஆராய்ந்து, அப்படியானால் அதற்கு காரணமாக இருந்தவர்கள் யார் என்று அடையாளம் கண்டு தண்டிக்கப்பட வேண்டும். மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x