Last Updated : 07 Jul, 2024 01:24 PM

 

Published : 07 Jul 2024 01:24 PM
Last Updated : 07 Jul 2024 01:24 PM

மாஞ்சோலை தொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தாவிட்டால் தீவிரப் போராட்டம்: கிருஷ்ணசாமி

திருநெல்வேலி: மாஞ்சோலை தொழிலாளர்கள் பிரச்சினையில் தீர்வு ஏற்படுத்தாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

திருநெல்வேலியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மாஞ்சோலையிலேயே வாழ்விடத்தை அமைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருக்கிறேன். இந்த வழக்கில் நானே நேரடியாக ஆஜராகி வழக்கை நடத்த அனுமதி கோர உள்ளேன். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரச்சினை சாதாரணமாக தீர்க்க வேண்டிய பிரச்சினை. இதில் சட்ட சிக்கலோ, வேறு எந்த சிக்கலோ இல்லை.

கடந்த 1929-ம் ஆண்டு ஆண்டு பிபிடிசி நிறுவனத்தோடு போடப்பட்ட ஒப்பந்தம் 2028-ல் முடிவடைகிறது. அந்த ஒப்பந்தம் முடிவடைந்த உடன் அந்த தேயிலை தோட்டங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்கள் வந்துவிடும். அங்கு உள்ள தேயிலை தோட்டங்களை அழிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவற்றை அப்படியே தமிழக அரசு கையகப்படுத்தி, அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வேலையை வழங்கலாம்.

தமிழக அரசால் நடத்த முடியாவிட்டால் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் மலையகப் பகுதி மக்களுக்கு நிலங்களை பகிர்ந்தளித்ததுபோல் மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கலாம். தமிழகு அரசு தேவையில்லாமல் இந்த விவகாரத்தில் சிக்கலை ஏற்படுத்துவதாக தெரிகிறது. கடந்த ஒரு மாதமாக மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு வேலை வழங்கவில்லை.

உடனடியாக இந்த பிரச்சினையில் தமிழக முதல்வர் தலையிட்டு, தீர்வு காண வேண்டும். தொழிலாளர்கள் பிரச்சினையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானதும், மனிதஉரிமைக்கு விரோதமானதுமாகும். அவர் சரியான அறிக்கையை மாநில அரசுக்கு கொடுத்தால் அரசு நல்ல முடிவு எடுக்க வாய்ப்பு இருக்கும். இதில் தீர்வு ஏற்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டங்களை தீவிரப்படுத்துவோம்.

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தொடர்புடையவர்கள் பெரும்பாலானோர் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வருகிறது. அண்மைக்காலமாக பல கொலை சம்பவங்கள் கூலிப்படையால் நடந்துள்ளது. கூலிப்படை கலாச்சாரம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதற்கான ஆணிவேரை கண்டுபிடித்து தீர்வு கண்டால் மட்டுமே சட்டம், ஒழுங்கை பாதுகாக்க முடியும். ஆருத்ரா மோசடி வழக்கில் பலருக்கு தொடர்பு உள்ளது.

இதில் தொடர்புடையவர்களை பாதுகாப்பது யார் என்பதை கண்டறிந்து, மோசடியில் தொடர்புடையவர்கள் அனைவரையும் கூண்டோடு கைது செய்ய வேண்டும். கொடநாடு கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை முன்கூட்டியே வெளியேற்ற வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு என்ன அவசியம் ஏற்பட்டது?. மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை யாருக்காகவோ தாரைவார்க்க முயற்சிப்பதாக மிகப்பெரிய சந்தேகம் ஏற்படுகிறது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x