Published : 07 Jul 2024 11:24 AM
Last Updated : 07 Jul 2024 11:24 AM

“ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிபிஐ விசாரணை தேவை; தமிழகத்தில் சட்டம் ஒழுங்கே இல்லை” - மாயாவதி @ சென்னை

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. ஆகையால் சிபிஐ விசாரணை தேவை என சென்னையில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பகுஜன் சமாஜ் கட்சி தேசியத் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.

சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5 ம் தேதி மாலை ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக முதல்கட்டமாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஸ் தம்பி உட்பட 8 பேர் சிறையில் அடைக்கப்படுள்ளனர். மேலும் 3 பேரை கைது செய்து அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் இன்னும் சற்று நேரத்தில் நடைபெற‌ உள்ளது. பெரம்பூர் பந்தர்கார்டன் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அக்கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி இன்று காலை 10.50 மணி அளவில் பெரம்பூர் பந்தர்கார்டன் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் பேசிய அவர், ”புத்தர் காட்டிய மனிதாபிமானப் பாதையில் பயணித்தவர் ஆம்ஸ்ட்ராங். அவர் அவரது வீட்டுக்கு அருகேயே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அந்தத் துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனைடைந்தேன் இது தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டிருப்பதையே காட்டுகிறது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இத்தருணத்தில், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு தமிழக அரசு பாதுகாப்பு தர வேண்டும்.

இந்தக் கொலை தொடர்பாக கைதானவர்கள் உண்மைக் குற்றவாளிகள் அல்ல என்ற தகவல் கிடைத்துள்ளது. எனவே, இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை. சட்டம் தன் கடமையை செய்யட்டும்.
கட்சியினர் யாரும் சட்டம், ஒழுங்கை கையில் எடுக்க வேண்டாம் என வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாட்டில் பட்டியலின மக்களின் நலன் காக்கப்பட வேண்டும். அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சி என்றும் உறுதுணையாக இருக்கும்.” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x