Published : 07 Jul 2024 09:03 AM
Last Updated : 07 Jul 2024 09:03 AM
சென்னை: தீபாவளி பண்டிகை முடிந்து, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து நவ.3-ம் தேதி சென்னை திரும்பும் விரைவு ரயில்களின் ரிட்டன் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்தது. பெரும்பாலான பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
நிகழாண்டில் தீபாவளி பண்டிகை வரும் அக்.31-ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பண்டிகைக்கு ஒரு சில நாட்கள் முன்னதாக, சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு விரைவு ரயில்களில் புறப்படுவதற்கு வசதியாக டிக்கெட் முன்பதிவு ஜூன் 30 முதல் ஜூலை 2-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த நாட்களில் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கி சிலநிமிடங்களில் முடிந்தது. குறிப்பாக, முக்கிய ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளுக்கு அதிக அளவில் தேவைகள் இருந்தன.
இதுபோல, தீபாவளி முடிந்து பல்வேறு நகரங்களில் இருந்து சென்னை திரும்புவதற்கான டிக்கெட் முன்பதிவும் நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வந்தது. இந்நிலையில், தீபாவளி பண்டிகை முடிந்து, நவ.3-ம்தேதி (ஞாயிற்றுக் கிழமை) பல்வேறு நகரங்களில் இருந்து சென்னை திரும்புவதற்கான டிக்கெட் முன்பதிவு ஐஆர்சிடிசி இணையதளம், டிக்கெட் கவுன்ட்டர்களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முக்கிய ரயில்களில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்து, காத்திருப்போர் பட்டியலுக்கு வந்தது.
மதுரை, தென்காசி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருச்சி ஆகியநகரங்களில் இருந்து சென்னைக்கு புறப்படும் பாண்டியன், பொதிகை, நீலகிரி, கன்னியாகுமரி, மலைக்கோட்டை விரைவு ரயில்களில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு 2 முதல் 4 நிமிடங்களுக்குள் முடிந்து,காத்திருப்போர் பட்டியலை காட்டியது.
இந்த ரயில்களில் அடுத்த சில மணி நேரத்தில் காத்திருப்போர் பட்டியலும் முடிந்ததை குறிப்பிடும் ரெக்ரெட் (Regret) என்று வந்தது. இதுதவிர, சென்னைக்கு திரும்பும் முத்துநகர், சேரன், அனந்தபுரி ஆகிய விரைவு ரயில்களிலும் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளுக்கான முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்தது.
இதுபோல, முக்கிய ரயில்களில் மூன்றடுக்கு ஏசி, இரண்டடுக்கு ஏசி, முதல் வகுப்பு ஏசி ஆகிய பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு அடுத்தடுத்து நிறைவடைந்தது. இதனால், பெரும்பாலான பயணிகளுக்கு முன்பதிவு டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றமே மிஞ்சியது. எனவே, தீபாவளி பண்டிகைக்கான சிறப்புரயில்களை விரைவாக அறிவிக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT