Published : 07 Jul 2024 08:34 AM
Last Updated : 07 Jul 2024 08:34 AM

146 பழங்குடியின இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர்

சென்னை: திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற்ற 146 பழங்குடியின இளைஞர்களுக்கு பன்னாட்டு மற்றும் இந்திய முன்னணி நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பணிநியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் விரிவானபழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நிறுவனத்தின் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்து, பன்னாட்டு மற்றும் இந்திய முன்னணி நிறுவனங்களால் நேர்முக தேர்வுகள் நடத்தப்பட்டு, பல்வேறு பணிகளுக்கு 146 பழங்குடியின இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழகத்திலுள்ள கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, நாமக்கல், திருச்சி மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பட்டப்படிப்பு, பொறியியல், தொழிற்நுட்பக்கல்வி, ஐடிஐ படித்துவேலையில்லாமல் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைவழங்கி, அவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் வாழ பழங்குடியினர் நலத்துறையின் மூலம் திட்டம் வகுக்கப்பட்டது.

மலைப்பகுதி கிராமங்களில் வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் 450 நபர்களை திரட்டி திருச்சி, சேலம் மற்றும் சென்னை மாவட்டங்களில் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தின் முடிவில் தகுதிவாய்ந்த 200 பழங்குடியின இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த பிப்ரவரி 13-ம் தேதி தேர்வு செய்யப்பட்ட 200 பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சிக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

பயிற்சி ஆணைகள் பெற்ற 200 பழங்குடியின இளைஞர்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி கழகத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள என்டிடிஎப் பயிற்சி நிறுவனத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டது. இதில் 146 இளைஞர்கள் பன்னாட்டு மற்றும் தமிழகத்திலுள்ள சிறந்த இந்திய நிறுவனங்களுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், வளர்ச்சித் துறை ஆணையர் நா.முருகானந்தம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் க.லட்சுமி பிரியா, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா, பழங்குடியினர் நல இயக்குநர் எஸ்.அண்ணாதுரை உடன் இருந்தனர். தமிழக அரசு செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x