Published : 07 Jul 2024 06:57 AM
Last Updated : 07 Jul 2024 06:57 AM
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை செய்யப்பட்டது தொடர்பாக செம்பியம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்டமாக வடசென்னை காவல் கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் மேற்பார்வையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி பொன்னை பாலு, அதே பகுதி சந்தோஷ், பெரம்பூர் பொன்னுசாமி நகர், 3-வது தெரு திருமலை, திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை மணிவண்ணன், குன்றத்தூர் திருவேங்கடம், திருநின்றவூர் ராமு என்ற வினோத், அதே பகுதியைச் சேர்ந்த அருள், செல்வராஜ், விஜய், கோகுல், சிவசக்தி ஆகிய 11 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்களை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தவும், இறுதி நிகழ்வில் பங்கேற்கவும் உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவருமான மாயாவதி தனி விமானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு சென்னை வருகிறார்.
இதுதொடர்பாக மாயாவதி தனது எக்ஸ் வலைதளப்பதிவில், “பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகதலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைகண்டிக்கத்தக்கது. குற்றவாளிகளை தமிழக அரசு தண்டனை பெற்றுத்தர வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டதுடன் அஞ்சலி செலுத்த சென்னைக்கு வருவதையும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே சென்னை காவல்ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதற்கட்ட விசாரணையில் இந்த கொலையில் அரசியல் முன்பகைஎதுவும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. பொன்னை பாலுவின் அண்ணன் ரவுடி ஆற்காடு சுரேஷ்,சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது சில சம்பவம் நடைபெற்றது. எனவே அந்த சம்பவம் குறித்தும், பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.
பரபரப்பு வாக்குமூலம்: வடசென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி நாயுடு. இவரது வலது கரமாக ரவுடிகள் தென்னரசு,பாம் சரவணன் மற்றும் ஆம்ஸ்ட்ராங் இருந்தனர். இவருக்கு எதிர்தரப்பாக ரவுடி ஆற்காடு சுரேஷ் இருந்துள்ளார். இரு தரப்பினரும் அடிக்கடி நேரடியாகவும், மறைமுகமாகவும் மோதியுள்ளனர். இந்நிலையில், தற்போது கைதான பொன்னை பாலு போலீஸ்தரப்பில் அளித்த வாக்குமூலம்:
எனது அண்ணன் ஆற்காடு சுரேசை கடந்த ஆண்டு ஆகஸ்ட்மாதம் 18-ந் தேதி வெட்டிக் கொலைசெய்தனர். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு ஆம்ஸ்ட்ராங் மறைமுகமாக பல்வேறு உதவிகளை செய்தார். சுரேசின் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான மாதவன் என்பவர் கடந்த ஜனவரி மாதம் கொலை செய்யப்பட்டார். இதன் பிறகு எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டே இருந்தன.
இதனால் ஆம்ஸ்ட்ராங்கை விட்டு வைத்தால் எனது உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்று கருதினேன். எனது அண்ணனுக்கு நேற்று முன்தினம் (5-ம் தேதி) பிறந்த நாளாகும். எனவே அன்றைய தினம் ஆம்ஸ்ட்ராங்கை எப்படியும் கொல்ல வேண்டும் என்று திட்டம் போட்டோம். இதன்படி கொலை செய்தோம். இவ்வாறு வாக்கு மூலம் அளித்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
சாலை மறியல்: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை நடந்தது. அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனை முன் திரண்டு, கொலையை கண்டித்தும் வழக்கை சிபிஐ விசாரிக்க வலியுறுத்தியும் சென்ட்ரல் பூந்தமல்லி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதுதள்ளுமுள்ளு ஏற்பட்டது. 200-க்கும் மேற்பட்டோரை குண்டுக்கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றி போலீஸார் அப்புறப்படுத்தினர்.
குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை: போலீஸாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு - முதல்வர் மு.க.ஸ்டாலின், சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது.
ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT