Published : 06 Jul 2024 09:32 PM
Last Updated : 06 Jul 2024 09:32 PM
கரூர்: கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மனு 2-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் அவரது சகோதரர் சேகரின் முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
கரூர் நகர காவல் நிலையத்தில், மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் போலி சான்றிதழ் வழங்கி பத்திரப்பதிவு செய்ததாக அளித்த புகாரில் 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 9-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என்பதால் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு கடந்த மாதம் 12-ம் தேதி மனு தாக்கல் செய்தார். 3 முறை விசாரணை ஒத்திவைக்கப்பட்டு விசாரணைக்கு பின் கடந்த 25-ம் தேதி முன் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 25 நாட்களுக்கு மேலாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்து வருகிறார்.
இதற்கிடையில், கடந்த மாதம் 14-ம் தேதி இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதே நாளில் வாங்கலை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவர் சகோதரர் சேகர், பிரவீண் உள்ளிட்ட 13 பேர் தன்னை மிரட்டி ரூ.100 கோடி மதிப்புள்ள ரூ.22 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக புகார் தெரிவித்திருந்தார். இப்புகார் வாங்கல் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு கடந்த மாதம் 22-ம் தேதி மேற்கண்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் சிகிச்சையின்போது உடனிருக்கவேண்டும் எனக் கூறி கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் முன் ஜாமீன் மற்றும் இடைக்கால முன் ஜாமீன் கேட்டு ஜூலை 1-ம் தேதி மனு தாக்கல் செய்தார். கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு கடந்த ஜூலை 2-ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில் ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்கள் நடைபெற்ற நிலையில், இதுதொடர்பான உத்தரவு ஜூலை 4-ம் தேதி பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். ஜூலை 4-ம் தேதி வழக்கு வந்தபோது, 5-ம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
ஜூலை 5-ம் தேதி தமிழக அரசு, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஷோபனா தரப்பு என 3 தரப்பு வாதங்கள் நடைபெற்றது. தொடர்ந்து முன் ஜாமீன் மனு மீதான உத்தரவு இன்று (ஜூலை 6-ம் தேதி) பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் ஆகியோர் மீதான சிபிசிஐடி வழக்கு மற்றும் வாங்கல் வழக்கு என தலா இரு வழக்குகளுக்காக முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நீதிபதி சண்முகசுந்தரம் அனைத்து மனுக்களையும் இன்று (ஜூலை 6ம் தேதி) தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT