Last Updated : 06 Jul, 2024 02:51 PM

5  

Published : 06 Jul 2024 02:51 PM
Last Updated : 06 Jul 2024 02:51 PM

மேம்பாலம் அமைத்தும் தீராத நெரிசல்: பல்லாவரத்தில் சிக்கி திணறும் வாகன ஓட்டிகள்

பல்லாவரத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. | படம்: எம்.முத்துகணேஷ்

சென்னை கிண்டி- தாம்பரம் இடையிலான ஜிஎஸ்டி சாலையில், முக்கியமான பகுதி பல்லாவரம். தினசரி தாம்பரத்தில் இருந்து சென்னை நகருக்குள்ளும், அங்கிருந்து தாம்பரத்துக்கும் லட்சக்கணக்கான வாகனங்கள் பயணித்து வருகின்றன. இதனால், ஆங்காங்கே சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, குரோம்பேட்டை, துரைப்பாக்கம் ரேடியல் சாலை - ஜிஎஸ்டி சாலை சந்திப்பு மற்றும் விமான நிலையம் முன்பாக மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இதனால், போக்குவரத்து நெரிசல் சற்றே குறைந்தது.

இருப்பினும், பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை - குன்றத்தூர் சாலை சந்திப்பு பகுதியை வாகனங்கள் கடப்பதில் ஏற்பட்ட பிரச்சினையால், மீண்டும் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டது. இதுதவிர, பல்லாவரம் சந்தை நடைபெறும் நாளில் வாகன நெருக்கடி அதிகரித்தது.

இதை தவிர்க்க சிறிய போக்குவரத்து மாற்றங்களை செய்தபோதும் முழுமையான தீர்வுகாணப்படாத நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில்,ஜிஎஸ்டி சாலையில், குன்றத்தூர் சாலை, பல்லாவரம் சந்தை சாலை மற்றும் வெட்டர் லேன் ஆகியவற்றை இணைக்கும் வகையில் 1.5 கிமீ தொலைவுக்குமேம்பாலம் அமைக்கப்பட்டது. 2016-ல் தொடங்கப்பட்ட பணி 2020-ல் முடிவடைந்தது. அந்தாண்டு செப்டம்பர் மாதம் பாலம் திறக்கப்பட்டது.

பாலம் திறக்கப்பட்ட போது, பல்லாவரத்தில் இருந்து கிண்டி செல்லும் ஒரு வழிப்பாதை பாலமாக இருந்தது. இதனால், கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் இலகுவாக சென்று வந்தன. ஆனால், கிண்டியில் இருந்து தாம்பரம் நோக்கி வரும் வாகனங்கள் மீண்டும் பல்லாவரத்தில் நெரிசலில் சிக்கின.

இதையடுத்து, பாலத்தை இருவழிப்பாதையாக மாற்ற உத்தரவிடப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் இரு மார்க்கமும் வாகனங்கள் செல்லும் வகையில் மாற்றப்பட்டது. இதன்மூலம், வாகன நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டது. இதற்கு வரவேற்பும் கிடைத்தது.

ஆனால், தற்போது காலை ‘பீக் ஹவரில்’ மீண்டும்அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. குறிப்பாக, அந்த பாலத்துக்கு முன்னதாக அமைந்துள்ள துரைப்பாக்கம் ரேடியல் சாலை சந்திப்புபாலத்திலும், பாலத்தின் கீழ் திருநீர்மலை செல்லும் சாலையில் இருந்து வாகனங்கள் வெளியில் வரும் இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்படுகிறது.

இங்கிருந்து செல்லும் வாகனங்கள் பல்லாவரம் புதிய பாலத்தின் மேலும், கீழும் செல்லும்போது அங்கும் நெரிசலில் சிக்குகின்றன. இதுதவிர,திருநீர்மலை சாலையில் இருந்து வரும் வாகனங்கள்அங்குள்ள பாலத்தின் அணுகு சாலையில் சென்று, பல்லாவரம் புதிய சாலையின் கீழ் திரும்பி, மீண்டும் குரோம்பேட்டை நோக்கி செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இருசக்கர, 4 சக்கர வாகன ஓட்டிகள், அங்கு அமைத்துள்ள சாலை தடுப்புகளை கடந்து எதிர்திசையில் வந்து பாலத்தின் கீழேயே சாலையை கடக்கின்றனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் கடும் நெரிசலில் சிக்குகின்றன. இதை தவிர்க்க, பாலத்தின் மேல் செல்லும் வாகனங்களும் பாலத்தின் கீழ் இறங்க காத்திருக்க வேண்டியுள்ளது.

தற்போது வெயில் காலம் என்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.இதுகுறித்து, குரோம்பேட்டையைச் சேர்ந்த கோவிந்தராஜ் கூறுகையில், ‘‘குரோம்பேட்டையில் இருந்து காலையில் வேலைக்கு செல்லும்போது பல்லாவரம் பகுதியை கடக்கவே அரை மணிநேரம் ஆகிவிடுகிறது. புதிய பாலத்தின் மேலும் கீழும் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

பாலத்தின் மேலே இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதால், சிறிய வாகனங்கள்மட்டுமே செல்ல முடியும். ஏதேனும் வாகனம் பழுதாகிவிட்டால், கடப்பது சிரமமாகிறது. இப்பகுதியில் தேவையான மாற்றங்களை போக்குவரத்து போலீஸார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து செய்ய வேண்டும். திருநீர்மலை சாலையில் இருந்து வரும் வாகனங்கள் எளிதாக செல்வதற்கான வழிவகைகளை செய்யலாம்’’ என்றார்.

இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பாலத்தின் இறுதியில் ராணுவத்துக்கு சொந்தமான இடம் கேட்கப்பட்டு அவர்களும்ஒப்புதல் அளித்துள்ளனர். விரைவில் இப்பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்படும். அப்போது இப்போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x