Published : 06 Jul 2024 12:27 PM
Last Updated : 06 Jul 2024 12:27 PM

“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை” - திருமாவளவன்

சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

சென்னை: “பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை. எனவே, இந்த கொலையின் பின்னணியில் இருந்தவர்கள், உண்மையான குற்றவாளிகள் யாரோ, அவர்களை கைது செய்ய வேண்டும்” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் நேற்று மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அவரது உடலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் இன்று (சனிக்கிழமை) காலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் மருத்துவமனைக்கு வெளியே அவர் செய்தியாளர்களைச் சந்தித்தாா். அப்போது அவர் கூறியதாவது: “ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பெரம்பூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், பொதுமக்களின் பார்வைக்காக வைக்கவுள்ளோம். தமிழக அரசு அதற்கான அனுமதியை வழங்கியிருக்கிறது.

அதேபோல, அவருடைய கட்சி அலுவலகத்தின் வளாகத்தினுள் அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்கும், அனுமதி அளிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. அந்த கோரிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வலியுறுத்துகிறது. எனவே, தமிழக அரசு அதனை பரிசீலிக்க வேண்டும். அவருடைய சொந்த இடத்தில், பட்டா நிலத்தில், அவருடைய கட்சி அலுவலகத்தின் வளாகத்தில் உடலை அடக்கம் செய்வதற்கு அரசு அனுமதியளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இந்த கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளை கண்டறிவதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இந்த கொலை வழக்கில் இப்போது சரண் அடைந்து இருப்பவர்கள், உண்மையான குற்றவாளிகள் இல்லை.

அந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள், அவர்களைத் தூண்டிவிட்டவர்கள், அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். ஆகவே, சரண் அடைந்தவர்களை கைது செய்துவிட்டோம் என்ற வகையிலே காவல்துறை புலன் விசாரணையை நிறுத்திக் கொள்ளக்கூடாது. இந்த கொலையின் பின்னணியில் இருந்தவர்கள், உண்மையான குற்றவாளிகள் யாரோ, அவர்களை கைது செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் , விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இங்கு திரண்டிருக்கும் அமைப்புகளின் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x