Published : 06 Jul 2024 05:08 AM
Last Updated : 06 Jul 2024 05:08 AM
சென்னை: புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது குறித்து சென்னையில் 10 ஆயிரம் போலீஸாருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்தெரிவித்தார்.
வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில், புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடத்தை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று திறந்து வைத்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசு விடுமுறை தினங்கள் தவிர திங்கள் முதல் வெள்ளிவரை பொதுமக்களிடம் புகார் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. புதன்கிழமைகளில் நானே நேரில் மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கிறேன். காவல் ஆணையர் அலுவலகத்துக்கு தினமும் 300-க்கும் மேற்பட்டோர் வருகை தருகின்றனர். அவர்களின் வசதிக்காக தற்போது வாகன நிறுத்துமிடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து முதல்கட்டமாக, உதவி ஆய்வாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 10 ஆயிரம் போலீஸாருக்கு சென்னையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள போலீஸாருக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. புதிய சட்டங்கள் தொடர்பாக எந்தக் குழப்பமும் இல்லை. பழைய சட்டங்களில் சில ஷரத்துகள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன. பெரிய வித்தியாசம் இல்லை.
இணையவழி குற்ற வழக்குகளில் விரைந்து துப்பு துலக்கும் வகையில் சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையங்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
அண்மையில் பள்ளிகள், விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது இங்குமட்டுமல்ல, அகில இந்திய அளவில்கூட மிரட்டல் உள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம். இதற்காக தென் சென்னை காவல் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT