Published : 05 Jul 2024 06:09 PM
Last Updated : 05 Jul 2024 06:09 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், டெல்லி சென்ற பாஜக எம்எல்ஏ-க்கள் புதுச்சேரி திரும்பினர். பாஜக மேலிடப் பார்வையாளர் விரைவில் புதுச்சேரி வரவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. அதன் தலைவராக முதல்வர் ரங்கசாமி உள்ளார். இந்த நிலையில், பாஜக எம்எல்ஏ-க்கள், பாஜக ஆதரவு சுயேட்சைகள், வாரியத் தலைவர், அமைச்சர் பதவி கோரி வந்தனர். இதனிடையே, புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் தோற்றார்.
தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தைவிட கூடுதலாக சுமார் ஒரு லட்சத்து 36 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். ஆளும்கட்சியாகவும், 22 எம்எல்ஏ-க்கள் பலத்தோடும் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி கணிசமான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இது ஆளும் கூட்டணியில் உள்ள என்ஆர்.காங்கிரஸ், பாஜக இடையே விரிசலை உண்டாக்கியது.
முதல்வர் ரங்கசாமி மற்றும் பாஜக அமைச்சர்களின் செயல்பாடுகளே தோல்விக்குக் காரணம் என பாஜக எம்எல்ஏ-க்களில் ஒரு பிரிவினர் போர்க்கொடி தூக்கினர். புதுவை சட்டப்பேரவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பாஜக எம்எல்ஏ-க்களில் 3 பேர் ஒரு பிரிவாகவும், மற்ற மூவர் தனியாகவும் உள்ளனர். அதிருப்தி எம்எல்ஏ-க்களாக கல்யாணசுந்தரம், ஜான்குமார், அவரது மகன் ரிச்சர்ட் ஆகியோர் உள்ளனர்.
பாஜகவுக்கு ஆதரவு தரும் சுயேட்சை எம்எல்ஏ-க்கள் அங்காளன், சிவசங்கர், சீனிவாச அசோக் மற்றும் நியமன எம்எல்ஏ-வான வெங்கடேசன் ஆகியோர் எதிரணியில் உள்ளனர். நியமன எம்எல்ஏ-க்களில் ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோர் அதிருப்தி எம்எல்ஏ-க்களோடு சேரவில்லை. இதனால் புதுவை பாஜகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதில், அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தரப்பினர் முதல்வர் ரங்கசாமிக்கான ஆதரவை பாஜக விலக்கிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
சமீபத்தில் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டா, சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால், அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ்ஜி ஆகியோரை சந்தித்தும் அவர்கள் இதை வலியுறுத்தினர். உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் இவர்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் அமித் ஷா உத்தரபிரதேசத்தில் சென்றிருந்ததால் அவரைச் சந்திக்க முடியாமல் அதிருப்தி எம் எல்ஏ-க்கள் புதுச்சேரி திரும்பி இருக்கிறார்கள். இருப்பினும் 8-ம் தேதிக்கு பிறகு அமித் ஷா டெல்லி திரும்பிய பிறகு அதிருப்தி எம்எல்ஏ-க்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கித்தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தரப்பில் பேசிய கல்யாணசுந்தரம், ''பாஜக தேசிய தலைவர் நட்டா மற்றும் அமைப்புச் செயலாளர் சந்தோஷ்ஜி ஆகியோரை சந்தித்தோம். அப்போது புதுவை அரசில் நடைபெறும் விவகாரங்களை தெரிவித்தோம். இதேநிலை நீடித்தால் 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படும் என தெரிவித்தோம். நாங்கள் சொன்னதை அவர்கள் முழுமையாக கேட்டுக் கொண்டனர். இது தொடர்பாக உள்துறை அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். 8-ம் தேதிக்கு பிறகு நேரம் ஒதுக்கித்தருவதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது புதுச்சேரியில் முக்கியத் துறைகள் முதல்வர் ரங்கசாமியிடம்தான் உள்ளது. அரசின் செயல்பாடுகளில் குளறுபடி உள்ளது. கூட்டணி தர்மத்தின்படி கூட்டணி கட்சி எம்எல்ஏ-க்களுடன் முதல்வர் ரங்கசாமி எதையுமே கலந்து ஆலோசிப்பதில்லை. மத்திய அரசு நிதி தருவதற்கு தயாராக இருந்தும் முதல்வரும், அமைச்சர்களும் அதைக் கேட்டுப் பெற டெல்லி செல்வதில்லை.
மாநில வளர்ச்சிக்கும் இவர்கள் ஒத்துழைப்பதில்லை. வளர்ச்சியே இல்லாமல் கூட்டணியில் இருந்து என்ன பயன்? நாங்கள் கூட்டணியில் இருக்க வேண்டுமென்றால் முதல்வர் எங்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். விரைவில் பாஜக மேலிட பார்வையாளர் புதுச்சேரி வரவிருக்கிறார். அவர் மாநில பாஜக தலைவர், பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்களை கலந்து ஆலோசித்துவிட்டு முதல்வரையும் சந்திக்கவுள்ளார்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT