Published : 05 Jul 2024 03:33 PM
Last Updated : 05 Jul 2024 03:33 PM

“தலைமை சரியில்லை; அதிமுகவுக்கு மக்கள் தண்டனை கொடுத்துள்ளனர்” - அண்ணாமலை பதிலடி

விழுப்புரம்: “அதிமுக கட்சி நன்றாக இருந்தாலும் கூட, தலைவர்கள் சரி இல்லை என்ற காரணத்துக்காக மக்கள் தண்டனை கொடுத்துள்ளனர். சட்டம் ஒழுங்கு கெட்டுபோய் விட்டதால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக கூறுகிறார் எடப்பாடி பழனிசாமி. 2026-லும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு போயிருக்கும், அப்போதும் அதிமுக சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்குமா?” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

விழுப்புரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அண்ணாமலை பொறுப்புக்கு வந்த பிறகு தமிழகத்தில் பாஜக வளர்ந்திருப்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார், என்ற எடப்பாடி பழனிசாமியின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நம்பிக்கை துரோகி என்ற பெயர் ஒருவருக்குப் பொருந்தும் என்றால் அது எடப்பாடி பழனிசாமிதான். அவரை பிரதமர் அழைத்துச் சென்று டெல்லியில் அவருக்கு அருகிலேயே அமரவைத்தார். ஆனால், அவர் தமிழகம் திரும்பியதும் சுய லாபத்துக்காக, இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்ற எண்ணத்தில், பாஜக வேண்டாம் என்று கூறி ஒதுங்கியவர், எடப்பாடி பழனிசாமி.

அதற்கு மக்கள் அவருக்கு என்ன பாடம் புகட்டினார்கள். பல இடங்களில் அவருக்கு டெபாசிட் இழக்கச் செய்தனர். தமிழகத்தின் அரசியல் வரலாற்றில், இவ்வளவு பெரிய ஒரு அரசியல் கட்சி, தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்து கட்சி, இத்தனை இடங்களில் டெபாசிட் இழந்தது என்பதற்கான கின்னஸ் சாதனையை செய்துள்ளது.

அதற்கு காரணம், அதிமுக கட்சி நன்றாக இருந்தாலும் கூட, தலைவர்கள் சரி இல்லை என்ற காரணத்துக்காக மக்கள் தண்டனை கொடுத்துள்ளனர். கோவைக்கு நாங்கள் கொடுத்திருக்கும் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றுகிறோம் .எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு 134 வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறார். அதை எப்போது நிறைவேற்றுவார்.

தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு கெட்டுபோய் விட்டது, அதனால், அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக கூறியிருக்கிறார். 2026-லும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு போயிருக்கும், அப்போதும் அதிமுக சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்குமா? என்று எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்புகிறேன். தேர்தலைப் புறக்கணிப்பதற்கு புதுப்புது காரணங்களைக் கண்டுபிடிக்கும் எடப்பாடி பழனிசாமி, பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக இல்லை என்பதை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர்,” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x