Published : 05 Jul 2024 03:51 PM
Last Updated : 05 Jul 2024 03:51 PM

சென்னை - சேப்பாக்கம் பொதுப்பணித் துறை வளாகத்தில் மழைநீர் தேங்கி டெங்கு பரவும் அபாயம்

சென்னை சேப்பாக்கம் பொதுப்பணித் துறை வளாகத்தில் பழுதடைந்து சிதைந்த நிலையில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களால் சுகாதாரக் கேடு மட்டுமல்லாமல் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித் துறை வளாகத்தில் பொதுப்பணித் துறை (கட்டிடம்), நீர்வள ஆதாரத் துறை, அதன் துணை அலுவலகங்கள், பிற துறை அலுவலகங்கள் ஏராளமாக உள்ளன.

இந்த வளாகத்துக்கு அரசு பணியாளர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த வளாகத்தின் ஒரு பகுதியில் பழுதடைந்து, சிதைந்த நிலையில் கார், வேன், ஜீப் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அவற்றின் மீதும் அதன் அருகில் உள்ள பகுதிகளிலும் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தும், இலைகள் உதிர்ந்தும் குப்பையாக காட்சியளிக்கிறது. அந்த வாகனங்கள் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் புதர்மண்டிக் கிடக்கிறது.

அதனால் அங்கே தேள், பூரான் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் நடமாட்டம் இருப்பதாக அங்குள்ளவர்கள் அச்சத்துடன் கூறுகின்றனர். அந்த இடத்தின் அருகில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை ஊழியர் சங்கமும், தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை மின் பணியாளர்கள் சங்கமும் உள்ளது. அத்துடன் அமுதம் நியாய விலைக் கடையும் செயல்படுகிறது.

இக்கடைக்கு வரும் முதியவர்கள், பெண்கள் பழைய இரும்பு கடையைப்போல காணப்படும் அந்த பகுதியைக் கண்டு கலக்கமடைகின்றனர். மழைக்காலத்தில் குப்பைகளில் இருந்து துர்நாற்றமும் வீசுகிறது. அங்கேகுறிப்பாக பழைய டயர்கள், மண்ணெண்ணெய் பேரல்களில் மழை பெய்யும் போதெல்லாம் மழைநீர் தேங்குவதால் டெங்கு காய்ச்சலுக்கு காரணமான ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் நீடிக்கிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை வளாகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் கூறுகையில், "பொதுப்பணித் துறை வளாகத்தின் முக்கிய பகுதியாகவும், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகவும் இந்த இடம் இருக்கிறது. இதன் அருகே விநாயகர் கோயில் உள்ளது. ஏராளமானோர் வந்துசெல்லும் இங்கே கேண்டீன், பெட்டிக் கடைகளும் இருக்கின்றன.

மழை பெய்யும்போது விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டுசென்ற பிறகும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்று ஆதங்கப்பட்டனர்.

இதுதொடர்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறும்போது, “பொதுப்பணித் துறை வாகனங்கள் மட்டுமல்லாது பிற துறைகளின் வாகனங்களும் அங்கேநீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அந்த துறைகளுக்கு தகவல் அனுப்பிஅவற்றை அகற்றவும், பொதுப்பணித் துறையின் வாகனங்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை அந்த இடத்தில் உள்ள குப்பைகளை அகற்றவும், மழைநீர் தேங்குவதைத் தடுக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்தபோது பொது இடங்களில் பழுதடைந்துநீண்டநாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை அகற்றும்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியது. அதையும் மீறி கேட்பாரற்று கிடந்தவாகனங்களை மாநகராட்சியே அப்புறப்படுத்தியது.

இதனால் மழைநீர் தேங்கி டெங்கு பரவும் அபாயம் தடுக்கப்பட்டது. இதுபோல பொதுப்பணித் துறை அலுவலகவளாகத்தில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழுதடைந்த வாகனங்களை உடனடியாக அகற்றி டெங்கு பரவும் அபாயத்தையும், சுகாதார சீர்கேட்டையும் போக்க வேண்டும் என்று பொதுப்பணித் துறை வளாகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x