Last Updated : 05 Jul, 2024 02:19 PM

19  

Published : 05 Jul 2024 02:19 PM
Last Updated : 05 Jul 2024 02:19 PM

“தமிழகத்தில் பாஜக வளர்ந்தது போல் மாயத் தோற்றம்” - அண்ணாமலை மீது இபிஎஸ் விமர்சனம்

கோவை: “அண்ணாமலை பொறுப்புக்கு வந்த பிறகு தமிழகத்தில் பாஜக வளர்ந்திருப்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) கோவை வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக பற்றி சில விமர்சனங்களை தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு குறித்து ஏற்கெனவே அறிவித்து அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளோம். இருப்பினும் அதிமுகவை திட்டமிட்டு குறை சொல்லி அண்ணாமலை பேசியுள்ளார். இந்தத் தேர்தலில் அதிமுக போட்டியிட்டால் 3 அல்லது 4-ம் இடம் தான் வந்திருக்கும் என அவர் கூறியுள்ளார். அவர் மெத்தப் படித்தவர், மிகப் பெரிய அரசியல் ஞானி. அவரது கணிப்பு அப்படி உள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சுமார் 6,800 வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்றுள்ளார். 2-ம் இடத்தில் அதிமுக தான் உள்ளது. இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடாததற்கு பல்வேறு காரணங்களைக் கூறி இருக்கிறோம். திமுக பொறுப்பேற்ற பிறகு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வந்தது. அப்போது திமுக எவ்வாறு நடந்து கொண்டது என்பது நாடே அறியும்.

வாக்காளர்களை ஆடு, மாடு போல் பட்டியில் அடைத்து பணம், பரிசு பொருட்களை கொடுத்து வெற்றி பெற்றனர். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறவில்லை. அப்போது அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தது‌. அப்போது அண்ணாமலையும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்தத் தேர்தல் குறித்து அவருக்கு நன்றாகத் தெரியும்.

அப்படி இருந்தும் வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக பற்றி அவதூறாக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஏதோ அண்ணாமலை வந்த பிறகுதான் பாஜக தமிழ்நாட்டில் வளர்ந்தது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். உண்மை அதுவல்ல. 2014-ல் அமைக்கப்பட்ட கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அப்போது கோவை மக்களவைத் தொகுதியில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு கம்யூனிஸ்ட் வேட்பாளரை விட 42 ஆயிரம் வாக்குகள் தான் குறைவாகப் பெற்றிருந்தார்.

தற்போது அண்ணாமலை திமுக வேட்பாளரை விட 1.18 லட்சம் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளார். கடந்த 2014-ல் பாஜக கூட்டணி 18.80 சதவீத வாக்குகளைப் பெற்றது. ஆனால், 2024 மக்களவைத் தேர்தலில் 18.28 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆக, இப்போது 0.52 சதவீதம் குறைவாகத் தான் வாக்குகளை பெற்றுள்ளது பாஜக கூட்டணி.

பத்திரிகை பேட்டியின் வாயிலாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை. பாஜக தலைவராக இருந்து தமிழகத்துக்கு என்ன திட்டத்தை மத்திய அரசிடமிருந்து அவர் பெற்றுக் கொடுத்தார். கோவை தொகுதியில் போட்டியிடும்போது 100 வாக்குறுதிகள் 500 நாட்களில் நிறைவேற்றப்படும் என அறிவித்தார். இது போன்ற வாக்குறுதிகளை எந்த அரசியல் கட்சியினரும் கொடுத்ததில்லை. இப்போது மத்தியில் பாஜக ஆட்சி தான் இருக்கிறது. அதனால் அண்ணாமலை தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என கோவை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பாஜக இந்த முறை சரிவை சந்தித்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. அண்ணாமலை தன்னை அடையாளப்படுத்துவதற்காக பேசிக் கொண்டிருக்கிறார். தமிழக மக்களை பொறுத்தவரையில் நாடாளுமன்றத்துக்கு ஒரு மாதிரியும், சட்டப்பேரவைக்கு ஒரு மாதிரியும் தான் வாக்களிக்கிறார்கள்.

அதிமுகவுக்கென விதிமுறைகள் இருக்கின்றன. அந்த விதிமுறைகள் படி தான் கட்சி செயல்படுகிறது. கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட காரணத்தால் தான் சசிகலா கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுக பொதுக்குழுவில் தொண்டர்களின் மன ஓட்டத்தின் அடிப்படையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 3 பேர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர். இது பொதுக்குழு எடுத்த முடிவு. சசிகலா இப்போது கட்சியிலேயே இல்லாத நிலையில் அவரால் எப்படி அதிமுகவை ஒன்றிணைக்க முடியும்?

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளவுப்பட்ட போது, ஜானகி விட்டுக் கொடுத்து ஜெயலலிதாவை ஏற்று மீண்டும் ஒருமித்த கருத்துடன் அதிமுக ஆட்சியமைக்க வழி ஏற்படுத்தி கொடுத்தார். அவரைப் போன்ற நற்பண்புகளும், நல்ல எண்ணங்களும் இருந்தால் நன்றாக இருக்கும் என தொண்டர்கள் கருதுகிறார்கள்.

கல்விச் செல்வத்தை கொச்சைப்படுத்தி திமுகவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. எதிர்காலத்தில் பட்டம் படித்தவர்கள் தகுந்த பதில் கொடுப்பார்கள். கள்ளச் சாராய விவகாரத்தை திமுக அரசு திட்டமிட்டு மறைக்கின்றது. கள்ளக்குறிச்சியை தொடர்ந்து ஆனைமலை, விழுப்புரம், கடலூர், திருத்தணி ஆகிய பகுதிகளிலும் கள்ளச்சாராய வழக்குகள் பதியப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது. திமுக அரசு ஊழல் மலிந்த அரசாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு நன்மை செய்யும் அதிமுக 2026 தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது முன்னாள் அமைச்சரும் அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிமுக எம்எல்ஏ-க்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x