Published : 05 Jul 2024 01:50 PM
Last Updated : 05 Jul 2024 01:50 PM
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் பலியானவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு எப்படி வழங்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இந்தத் தொகை மிகவும் அதிகம் எனவும் தொகையை மறுபரிசீலனை செய்வது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் குடித்து இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த முகமது கோஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கள்ளச் சாராயம் குடிப்பது சட்டவிரோத செயல். கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களை பாதிக்கப்பட்டவர்களாக கருதக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து உள்ளிட்ட விபத்துக்களில் பலியாவோருக்கு குறைந்த இழப்பீடு வழங்கும் நிலையில், கள்ளச் சாராயம் குடித்து பலியானவர்களுக்கு எந்த அடிப்படையில் அதிக இழப்பீடு வழங்கப்படுகிறது என்பதை அரசு தெளிவுபடுத்தவில்லை எனவும் மனுவில் வினவப்பட்டுள்ளது.
கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகளோ, சமூக சேவகர்களோ, சமூகத்துக்காக உயிர் தியாகம் செய்தவர்களோ அல்ல என்பதால், அவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கள்ளச் சாராயம் குடித்து மரணமடைந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது அதிகம் எனவும், இவ்வளவு அதிக தொகையை எப்படி வழங்க முடியும் எனக் கேள்வி எழுப்பியது.
மேலும், இந்த தொகையை மறுபரிசீலனை செய்வது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT