Published : 05 Jul 2024 01:37 PM
Last Updated : 05 Jul 2024 01:37 PM

உடற்கல்வி ஆசிரியர் எண்ணிக்கையை குறைக்கும் அரசாணையை ரத்து செய்க: அண்ணாமலை

அண்ணாமலை | கோப்புப் படம்

சென்னை: அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “சுமார் 250 - 400 பள்ளி மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்றிருந்த விகிதத்தை, 700 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்பதாக மாற்றி, கடந்த ஜூலை 2, 2024 அன்று அரசாணை பிறப்பித்திருக்கிறது திமுக அரசு. பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு புதிய நியமனங்கள் செய்வதைக் குறைக்கும் நோக்கில், இந்த அரசாணை பிறப்பித்திருப்பதாகத் தெரிகிறது.

சமீபத்தில் வெளியான, திமுக அரசின் புதிய கல்விக் கொள்கையில், பள்ளிகளில் உடற்கல்வியையும், விளையாட்டுத் திறனையும் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அரசியல் நாடகத்துக்காக, தமிழ்நாடு கல்விக் கொள்கைக் குழு என்ற பெயரில் திமுக அமைத்த குழுவின் அறிக்கையை, திமுக அரசின் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஒருவர் கூடப் படித்துப் பார்க்கவில்லை என்பது
தெளிவாகியிருக்கிறது. வெறும் விளம்பரத்துக்காக ஒரு குழுவிற்கு இரண்டு ஆண்டுகள் பொதுமக்கள் வரிப்பணம் செலவிடப்பட்டிருக்கிறது.

புதிய அரசாணை மூலம், அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணிக்காகக் காத்திருக்கும் இளைஞர்களின் வாய்ப்பு, இந்த அரசாணையால் பறிபோயிருக்கிறது. மேலும், பெருகி வரும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் புழக்கத்திலிருந்து மாணவர்களை ஓரளவிற்குக் காப்பாற்றி வருவது, பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள்தான். கஞ்சா விற்பனைக்குத் தடையாக இருக்கும் உடற்கல்வி ஆசிரியர்களைத் தடுப்பதற்காகவே, இது போன்ற வினோதமான அரசாணையை, திமுக அரசு பிறப்பித்திருப்பதாக எண்ண வேண்டியுள்ளது.

உடனடியாக ஜூலை 2 தேதியிட்ட இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், முன்பு போலவே 250 - 400 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற விகிதத்தையே தொடர வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x