Published : 05 Jul 2024 06:56 AM
Last Updated : 05 Jul 2024 06:56 AM

தமிழகத்தில் இன்றுமுதல் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றுமுதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களிலும், 6 முதல் 10-ம் தேதி வரைஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நேற்று காலை 8.30 மணியுடன்நிறைவடைந்த 24 மணி நேரத்தில்பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை சோழிங்கநல்லூரில் 9 செமீ, நுங்கம்பாக்கத்தில் 7 செமீ, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், சென்னை தேனாம்பேட்டை, அயனாவரம், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ஆகிய இடங்களில் தலா 6 செமீ, சென்னை கோடம்பாக்கம், அண்ணாநகர், கொரட்டூர், அம்பத்தூர், ராயபுரம், டிஜிபி அலுவலகம், திரு.வி.க.நகர், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, செங்கல்பட்டு மாவட்டம் விஐடி (கேளம்பாக்கம்) சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில்தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும்அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனஅறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

115 சதவீதம் அதிக மழை: தமிழகம், புதுச்சேரியில் ஜூன் மாதத்தில் வழக்கத்தைவிட 115 சதவீதம் மழை அதிகமாக பெய்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மே 30-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் அதிகமாக மழை கிடைக்கும் கேரளா, கர்நாடகாவில் இந்த முறை குறிப்பிடும்படியாக மழை பெய்யவில்லை. வடமாநிலங்களிலும் கடந்த வாரம் வரை மழை தொடங்காமல், கடும் வெயில் வாட்டி வதைத்தது. சிலநாட்களுக்கு முன்புதான் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை முழுமையாக பரவியது. தற்போது தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் பருவமழை தீவிரமாக இருந்ததால், கடந்த ஜூன் 1 முதல் 30-ம்தேதி வரை 109 மி.மீ. மழை கிடைத்துள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக 50 மி.மீ. அளவு மழை மட்டுமே கிடைக்கும். இதன்மூலம் வழக்கத்தைவிட கடந்த மாதம் 115 சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளது.

மாவட்ட அளவில் அதிகபட்சமாக திருநெல்வேலியில் 417 சதவீதம், விருதுநகரில் 292, திருச்சியில் 249, கரூரில் 246, தேனியில் 238, ராமநாதபுரத்தில் 216,சென்னையில் 210, புதுக்கோட்டையில் 201 சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளது.

புதுச்சேரியில் வழக்கத்தைவிட 87 சதவீதம் மழை அதிகமாக கிடைத்துள்ள நிலையில், காரைக்காலில் 14 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x