Published : 05 Jul 2024 07:48 AM
Last Updated : 05 Jul 2024 07:48 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் மா சாகுபடி நடைபெறுகிறது. இங்கு விளையும் தோத்தாபுரி,அல்போன்சா ரக மாம்பழத்திலிருந்து மாங்கூழ் தயாரிக்கப்பட்டு உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவதுடன், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நடப்பாண்டில் மா மகசூல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆந்திரா, கேரளா, கா்நாடகா மாநிலங்களில் இருந்து மாங்கனியைக் கொள்முதல் செய்து, மாங்கூழ் உற்பத்தி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பல்வேறு நாடுகளில் மாம்பழம் மற்றும் மாங்கூழ் உற்பத்தி அதிகரித்துள்ளதால், ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக மாங்கூழ் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மாங்கூழ் உற்பத்தியாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் பையூர் மாதவன் `இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறியதாவது:
கிருஷ்ணகிரியில் ஆண்டுக்கு 5 லட்சம் டன் மாங்கூழ் உற்பத்தி செய்யப்பட்டு, உள்நாட்டில் 2 லட்சம் டன்னும், வெளிநாடுகளில் 3 லட்சம் டன்னும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா, சீனா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மெக்சிகோ, கம்போடியா, பாகிஸ்தான், வியட்நாம், பிலிப்பைன்ஸ், பிரேசில், நைஜீரியா, எகிப்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் மாங்கனி மற்றும்மாங்கூழ் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவும், ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல் -பாலஸ்தீனம் போர்களாலும், செங்கடல் பிரச்சினையாலும் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாடுகளில் மா ஏற்றுமதிக்கு வரி விலக்கும், விலை நிர்ணயமும் செய்யப்படுகிறது. இந்தியாவைவிட அங்கு விலை குறைவாக உள்ளது. இந்தியாவில் ஏற்றுமதி வரி மற்றும் சரக்கு கப்பல் கட்டணம் 3 மடங்கு அதிகரித்துள்ளது.
கட்டுப்பாடு தேவை: ஆண்டுதோறும் ஏற்றுமதி குறைந்து வரும் நிலையில், உள்நாட்டுப் பயன்பாட்டை அதிகரிக்க, மா குளிர் பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மத்திய, மாநிலஅரசுகள் கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும்.
குறிப்பாக, மா குளிர்பானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மாங்கூழ் அளவை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகள் இயற்கை முறையில் மா சாகுபடி செய்ய அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.
மாங்கூழ் அரவை ஆலைகள்3 மாதங்கள் மட்டுமே செயல்படுவதால், அந்த மாதங்களுக்கான மின் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். வங்கிகளில் மாங்கூழ் உற்பத்தியாளர்கள் பெற்றுள்ள கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு பையூர் மாதவன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT