Published : 05 Jul 2024 05:07 AM
Last Updated : 05 Jul 2024 05:07 AM

மெட்ரோ பணிகளுக்காக கோயிலை இடிக்க முடிவு; திமுகவினர் சொத்துகளை அரசுப் பணிக்காக கையகப்படுத்த முதல்வர் அனுமதிப்பாரா? - அண்ணாமலை கேள்வி

சென்னை: திமுகவினர் சொத்துகளை அரசுப் பணிகளுக்காக கையகப்படுத்த முதல்வர் அனுமதிப்பாரா எனக் கேள்வியெழுப்பியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மெட்ரோ பணிகளுக்காக கோயில்களை அகற்றுவதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை, ராயப்பேட்டையில் சுமார் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த  துர்க்கையம்மன் திருக்கோயில் ராஜகோபுரத்தையும்,  ரத்தின விநாயகர் கோயிலையும், மெட்ரோ பணிகளுக்காக இடிக்கதிமுக அரசு முடிவு செய்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

திமுகவினர் சொத்துகள் அமைந்திருக்கும் பகுதிகளை அரசுப் பணிகளுக்காகக் கையகப்படுத்த முதல்வர் ஸ்டாலின் அனுமதிப்பாரா? அறிவாலயத்துக்குள் அமைந்திருக்கும் திறந்த வெளி நிலத்தை, பூங்காவாகப் பராமரிக்கிறோம் என்று கூறி பல ஆண்டுகாலமாக, சிலைகளை வைத்து, வாகன நிறுத்தமாகப் பயன்படுத்தி வந்ததையும், அந்த இடத்தை சென்னைமாநகராட்சியிடம் ஒப்படைக்காமல் திமுக தாமதப்படுத்தியதையும் பொதுமக்கள் மறக்கவில்லை.

மெட்ரோ ரயில் திட்டத்துக்கான வரைவு அறிக்கை தயாரிக்கும்போதே, கோயில்களின் தொன்மையைக் கருதி மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். ஆனால், தொடர்ச்சியாக இந்து மத விரோதப் போக்கைக் கையாண்டு வரும் திமுக, இதை வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் விட்டிருப்பதாகவே தெரிகிறது.

பொதுமக்களுக்காகத்தான் திட்டங்களே தவிர, அவர்களின் நம்பிக்கையைச் சிதைப்பதற்காக அல்ல என்பதை திமுக அரசுக்கு நினைவுபடுத்தி, உடனடியாகத் தொன்மை வாய்ந்த கோயில்களை இடிக்க முயல்வதை நிறுத்திவிட்டு, மாற்றுப் பாதையில் மெட்ரோ பணிகளைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x