Published : 04 Jul 2024 06:59 PM
Last Updated : 04 Jul 2024 06:59 PM
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் பட்டா நிலங்களை உரியவர்களுக்கே மீண்டும் வழங்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட எஸ்.வி.ஜி.புரம் ஊராட்சியில், பட்டா இடத்தில் வீடு கட்டி வசித்து வந்த ஐம்பதுக்கும் அதிகமான வீடுகளை, எந்தவித முன்னறிவிப்புமின்றி, வீடுகளில் இருந்த பொதுமக்களை வலுக்கட்டாயமாக வெளியில் தள்ளி துன்புறுத்தி, அத்துமீறி இடித்துத் தள்ளியிருக்கிறது திமுக அரசு.
பட்டா இருந்தும் தங்கள் வீடுகள் இடிக்கப்பட்டதால், ஒதுங்க இடமின்றி, வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தில் பந்தல் அமைத்து அமர்ந்திருந்த, எட்டு பெண்கள் உட்பட 25 பேரையும் கைது செய்து அத்து மீறியிருக்கிறது காவல் துறை. திருத்தணி யூனியன் பாஜக மண்டலத் தலைவர் வீர பிரம்மச்சாரி மற்றும் ஆர்.கே.பேட்டை மண்டலத் தலைவர் எஸ்.கே. பாலாஜி ஆகியோரையும் திமுக அரசு கைது செய்திருக்கிறது.
கும்மிடிப்பூண்டியில், பட்டா இடத்தில் கட்டப்பட்ட தனது வீட்டை இடித்ததால், இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தின் அதிர்ச்சி விலகும் முன், திருவள்ளூரில் ஐம்பதுக்கும் அதிகமான வீடுகளை இடித்துத் தள்ளியிருக்கிறது திமுக அரசு. திமுகவின் இந்த பொதுமக்கள் விரோத அராஜகப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்குவதோடு, பட்டா இடத்தை மீண்டும் அவர்களுக்கே வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இளைஞர் தீக்குளித்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த அண்ணாமலை, "திமுக ஆட்சியில் ரியல் எஸ்டேட் முதலாளிகள் பலன்களையும், முன் எப்போதும் இல்லாத சலுகைகளையும் அனுபவித்து வருகின்றனர். அதே வேளையில், சாமானியர்களின் வீடுகள் சட்டவிரோதக் கட்டுமானங்கள் எனக்கூறி இடிக்கப்படுகின்றன.
கும்மிடிப்பூண்டியில் பட்டா நிலத்தில் கட்டப்பட்ட தனது வீட்டை அரசு அதிகாரிகள் இடிக்க விடாமல் தடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். மாநில மதுவிலக்கு அமைச்சரான வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, தீபாவளிக்கு முன்னதாக டாஸ்மாக்கில் 90 மில்லி பாட்டில்களை அறிமுகப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். திமுக அரசின் முன்னுரிமைகள் குறித்த பேச்சு தமிழகத்தில் அதிகரித்துள்ளது" என குற்றம் சாட்டி இருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT