Published : 04 Jul 2024 06:07 PM
Last Updated : 04 Jul 2024 06:07 PM
சென்னை: உண்டியல் பணம் திருடப்படுவதற்கு திமுக அரசின் இந்து விரோத சிந்தனைதான் காரணம் என்று இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இரண்டு நாட்களுக்கு முன் திருத்தணி முருகன் கோயில் உண்டியல் பணத்தை எண்ணிய ஊழியர்களே லட்சக்கணக்கில் திருடிவிட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த துணிச்சல் வருவதற்கு காரணம், திமுக அரசின் இந்து விரோத சிந்தனை தான் என்று பொதுமக்கள் கருதுகிறார்கள்.
ஒரு புறம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், ஆலய சொத்துக்களை மீட்டோம், நிலங்களை மீட்டோம் என மிகைப்படுத்தி பேசிக்கொண்டிருக்கிறார். இன்னொரு புறம், அவரது துறை ஊழியர்கள் ஆலய சொத்துக்களை கொள்ளையடிக்கிறார்கள், உண்டியல் பணத்தை திருடுகிறார்கள். இது மிகவும் கேவலமான செயல்.
கோயில் சொத்துக்களை காக்க திறனற்ற அரசு, கோயில்களை பக்தர்களிடமும், சமயப் பெரியவர்களிடமும் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்வதுதான் நேர்மையான செயலாகும்.
கோயில் உண்டியல் பணத்தை எண்ணுவதற்கு சரியான நடைமுறை வகுக்கப்பட வேண்டும். உண்டியல் திறப்பு முன்கூட்டியே அறிவிப்பு பலகையில் பக்தர்கள் அறிய வைக்க வேண்டும். தக்க முன்னேற்பாடுகளைச் செய்யாமல் திருடுபோன பிறகு நடவடிக்கை என்பது திருட்டுக்கு உடந்தையான செயல் என்றே கருதத் தோன்றுகிறது.
முறைகேடுகளில் ஈடுபடும், திருடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை மூடி மறைக்க அதிகாரிகள் துணை போகக்கூடாது. தொடர்ந்து உண்டியல் காணிக்கை திருட்டு சம்பவங்கள் நடப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் துணை போகின்றனரா என்பதை காவல்துறை கண்காணிக்க வேண்டும்.
வேண்டுதல் நிறைவேறவேண்டும் என்ற நோக்கத்துடன் பக்தர்கள் பக்தியுடன் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் விஷயத்தில் அலட்சியம் செய்யாமல் இனி இதுபோல் நடக்காமல் தடுக்க தக்க ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT