Last Updated : 04 Jul, 2024 04:39 PM

 

Published : 04 Jul 2024 04:39 PM
Last Updated : 04 Jul 2024 04:39 PM

“தங்கள் கட்சி தலைமையை சந்திப்பது பாஜக எம்.எல்.ஏ.க்களின் விருப்பம்” - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரி பாஜக எம்எல்ஏ-க்கள் டெல்லியில் தங்களது கட்சித் தலைமையை சந்தித்துப் பேசியது அவர்களது விருப்பம் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை, காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவர் வைத்தியநாதன், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், முன்னாள் எம்எல்ஏ-வான அனந்தராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் சட்டப் பேரவையில் முதல்வரின் அறையில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அப்போது அவர்கள் பேசும்போது, “புதுச்சேரியில் ரேஷன் கடைகளை மீண்டும் திறந்து இலவச அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்க வேண்டும். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். குடியிருப்பு, கோயில், பள்ளிகள் அருகில் உள்ள ரெஸ்டோ பார்களை மூடவேண்டும். மதுபார்களை 8 மணி நேரம் நடத்தும் வகையில் அரசு முறைப்படுத்த வேண்டும்” என்றனர்.

இதைத் தொடர்ந்து, பாஜக எம்எல்ஏ-க்கள் டெல்லியில் பாஜக தலைவரை சந்தித்து பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் முதல்வர் ரங்கசாமியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் ரங்கசாமி, “பாஜக எம்எல்ஏ-க்கள் அவர்களின் கட்சித் தலைமையை சந்திக்கிறார்கள். இது அவர்களின் விருப்பம்” என்றார்.

முதல்வர் கூட்டணி தர்மத்தை மீறிவிட்டதாக அவர்கள் சொல்கிறார்களே என்று கேட்டதற்கு, “இதுவரை எனக்கு அதுபோன்று தெரியவில்லை” என பதில் அளித்தார் ரங்கசாமி. எதிர்க்கட்சிகளுடன் நீங்கள் நெருக்கமாக இருப்பதாக பாஜக எம்எல்ஏ-க்கள் புகார் தெரிவிக்கிறார்களே என்று கேட்டதற்கு, “மக்களுக்கான, மாநில வளர்ச்சிக்கான எல்லா திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தும். புதுச்சேரியை சிறந்த மாநிலமாக கொண்டு வருவதற்கான நடவடிக்கையை இந்த அரசு எடுக்கும்” என்று தெரிவித்தார்.

பாஜக மாநிலத் தலைவர் செல்வகணபதி எம்.பி-யுடன் ஆலோசனை செய்தீர்களே, அவர் என்ன ஆலோசனை தெரிவித்தார் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது” என்றார். தொடர்ந்து, உங்கள் அரசு மீது பாஜக எம்எல்ஏ-க்கள் ஊழல் புகார் தெரிவித்துள்ளார்களே... வாரியத் தலைவர் பதவியை பாஜகவுக்கு கொடுப்பீர்களா? என்ற கேள்விக்கு முதல்வர் ரங்கசாமி எந்த பதிலும் அளிக்காமல் தனது அறையிலிருந்து வெளியேறி கேபினட் அறைக்குச் சென்றுவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x